பாத்தாம் அருகே மூழ்கிய டான்சானியக் கொள்கலக் கப்பல்

பாத்தாம் அருகே மூழ்கிய டான்சானியக் கொள்கலக் கப்பல்

1 mins read
அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்பு
89d3a526-18e9-4aec-a905-e252b348bae4
வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இரவு 10.30 மணிக்கு அந்தக் கப்பல் மூழ்கியதாகவும் அதிலிருந்த ஊழியர்கள் 9 பேரையும் இந்தோனீசிய அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டதாகவும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. - படம்: BATAMLINE.COM/X

டான்சானியாவில் பதிவுசெய்யப்பட்ட ‘கோல்டன் ஸ்டார் 1’ என்ற கொள்கலக் கப்பல், வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இரவு, இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுக்கு அருகே கடலில் மூழ்கியது.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாத்தாமிலிருந்து 6 கி.மீ தொலைவில் இரவு 10.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் 9 பேரும் இந்தோனீசிய அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்குள் நீர் புகுந்ததால் அது மூழ்கியதாக ஆணையம் கூறியது.

அவ்வழியாகச் செல்லும் பிற கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மிதக்கும் கொள்கலன்கள் தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தால் மலாக்கா நிரிணையிலும் சிங்கப்பூரிலும் கப்பல் போக்குவரத்துக்குப் பாதிப்பில்லை என்றும், சிங்கப்பூர்க் கடற்பகுதியில் எண்ணெய் மாசு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் ஆணையம் உறுதிப்படுத்தியது.

அந்தக் கப்பல் 107 கொள்கலன்களை ஏற்றிச் சென்றதாக இந்தோனீசியாவின் ‘அன்டாரா’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு உள்ளூர்த் தனிமைப்படுத்தும் நிலையத்தில் உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாகப்பல் விபத்துசரக்குஊழியர்மீட்புபாதுகாப்பு