‘மலாயன் தப்பீர்’ ஒன்று பொங்கோல் பூங்கா இணைப்புச் சாலை அருகே காணப்பட்டது. அது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நீந்தி வந்திருக்கக்கூடும் என ‘ஏக்கர்ஸ்‘ எனும் விலங்கு நல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூர் வனவிலங்குப் பார்வை என்னும் ஃபேஸ்புக் குழுவில் சனிக்கிழமை காலை கோனி தீவுக்கு எதிரேயுள்ள பொங்கோல் பூங்கா இணைப்புச் சாலையில் ஒரு பெரிய பன்றி போன்ற தப்பீரைக் கண்டதாக திரு ரிச்சர்ட் சீ பதிவிட்டிருந்தார்.
அந்த ஃபேஸ்புக் குழுவின் மற்றோர் உறுப்பினரான திரு எம்சி வாய் அந்த தப்பீரின் புகைப்படத்தையும், காணொளி ஒன்றையும் ரிச்சர்ட் சீ பதிவின் கருத்துரைப் பக்கத்தில் இணைத்து இது குறித்து தேசிய பூங்காக் கழகத்திடம் புகார் அளித்துள்ளேன் எனப் பதிவிட்டிருந்தார்.
“தப்பீர் அதன் வழியைக் கண்டுபிடித்து திரும்ப அதனுடைய இடத்திற்குச் செல்லும். இல்லையென்றால் அதைப் பிடித்து அதன் இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்,” என ‘ஏக்கர்ஸ்’ நிறுவனத்தின் இணைத் தலைமை நிர்வாக அதிகாரியான கலைவாணன் பாலகிருஷ்ணன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

