வரும் ஆண்டுகளில் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் மனிதவளம் மீது முக்கியக் கவனம் செலுத்தப்படும் என்றும் சுகாதாரக் கட்டமைப்பின் விரிவாக்கத்திற்கு இணையாகச் அத்துறையின் மனிதவளத்தையும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது குறித்துப் பேசிய திரு ஓங், தற்போதுள்ள பல மருத்துவமனைகள் பெரிதும் மறுசீரமைப்பு, விரிவாக்கப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் சொன்னார்.
இந்த விரிவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 2030ஆம் ஆண்டிற்குள் தேசிய சுகாதாரப் பராமரிப்புத் துறை மனிதவளத்தை 20 விழுக்காடு அதிகரிக்கச் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (16 ஜனவரி) தேசியப் பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் இடம்பெற்ற சிங்கப்பூர் சுகாதாரத் தரச் சேவை விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு ஓங் உரையாற்றினார்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிழக்குப் பொது மருத்துவமனைக்கான மனிதவளத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார். மேலும், அதிகரித்து வரும் பணிச்சுமையைக் கையாள மனிதவளத்தைத் திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“தீவிர சிகிச்சை மருத்துவமனைகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு முதன்மை மருத்துவரின் தலைமையிலான மருத்துவக் குழுக்களை அமைக்கச் செயல்பட்டு வருகிறோம். அந்த மருத்துவர் நோயாளியின் தேவைகளுக்கு ஏற்பப் பிற சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவார்,” என்றார் அமைச்சர் ஓங்.
மருத்துவமனைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் உள்ள பணிகளும் மறுவடிவமைப்பு செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுச் சுகாதார நிறுவனங்கள், சமுதாயக் கண் சிகிச்சை மையங்களுக்கு இடையிலான கூட்டுமுயற்சிகள் மூலம், கண் பரிசோதகர்களின் பணிகளை விரிவுபடுத்தவும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
சுகாதாரப் பணியாளர்கள் புதிய, விரிவாக்கப்பட்ட பொறுப்புகளுக்குத் தங்களை விரைவாகத் தகவமைத்துக்கொள்ளும் வகையில் பயிற்சி முறைகளையும் மாற்றியமைத்து வருவதாகச் சொன்ன திரு ஓங், சுகாதார அமைச்சு தாதியர், இணை மருத்துவ நிபுணர்களுக்கு, நீக்குப்போக்கான, பகுதிவாரியான பணியிடைப் பயிற்சித் திட்டங்களை உருவாக்க, உயர்கல்வி நிறுவனங்கள், பொதுச் சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
17வது முறையாக நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் 49 பொது, தனியார் சுகாதார நிறுவனங்கள், சமூகப் பராமரிப்புத் துறை சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த சுகாதார வல்லுநர்கள், பங்காளிகள் உட்பட மொத்தம் 5,171 பேர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் ‘சூப்பர்ஸ்டார்’ பிரிவில் யோகேஸ்வரி சந்திரசேகரன், 39, விருது பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் சமூகப் பணி, குடியிருப்போர் திட்டம், தகவல் சேவை மையப் பிரிவுக்குத் தலைவராகவும், துணை இயக்குநராகவும் அவர் பணியாற்றுகிறார்.
குடியிருப்பாளர்கள் தங்கள் எண்ணங்களையும் கவலைகளையும் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘ஹார்ட்டி செஷன்ஸ்’ எனப்படும் முறைசாரா ஆலோசனை அமர்வுகளை அவர் தொடங்கினார்.
கனிவுடன் கேட்டறிதல், ஆலோசனை வழங்குதலின் மூலம் யோகேஸ்வரியின் இந்த முயற்சி குடியிருப்பாளர்களின் நடத்தை சார்ந்த சிக்கல்களைச் சிறப்பாகக் கையாளப் பராமரிப்புக் குழுவிற்கு உதவியது.
அதே பிரிவில் விருது பெற்ற மற்றொருவர் சரவணன் மகாலட்சுமி, 49. ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் மருத்துவத் தாதியாக இருக்கும் அவர், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, தாதிமை இல்லங்கள் தொற்றுத் தடுப்பு, கட்டுப்பாடு குறித்த திட்டத்திற்கு தொண்டூழியம் புரிய அழைப்பு விடுத்தபோது ஆவலுடன் முன்வந்தார்.
அவரது குழுவின் முழு ஒத்துழைப்புடன் ஸ்ரீ நாராயண மிஷன் வெகு விரைவிலேயே தொற்று விகிதத்தில் கணிசமான குறைவு, மேம்பட்ட குணமடையும் சூழல், குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்பத்தினரிடையே அதிகரித்த நம்பிக்கை போன்ற உறுதியான நற்பலன்களைக் காணத் தொடங்கியது.

