மெடிட்டரேனியன் உணவுமுறை மிகவும் ஆரோக்கியமானது என்பதை உலகளாவிய சுகாதார அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்நிலையில், மெடிட்டரேனியன் உணவுமுறையில் எந்தெந்த உணவு வகைகள் சிங்கப்பூரில் உள்ள பெண்களுக்கு நன்மை பயக்கும் என்பதை கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட இருக்கிறது.
குறிப்பிட்ட சில மெடிட்டரேனியன் உணவு வகைகளைச் சாப்பிட்டு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆசிய மகளிரை ஊக்குவிக்க இப்புதிய ஆய்வு இலக்கு கொண்டுள்ளது.
குழந்தைகள் பெற்றெடுக்கக்கூடிய வயதில் உள்ள 300 ஆசியப் பெண்களிடம் இந்த ஆய்வு சிங்கப்பூரில் நடத்தப்படும்.
மெடிட்டரேனியன் உணவுமுறை சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துக்குப் பதிலாக தானியவகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
இறைச்சி வகைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் ஆகியவற்றுக்குப் பதிலாக மீன்களுக்கும் தாவரவகைகளிலிருந்து பெறப்படும் புரதச்சத்துக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
இந்த உணவுமுறை இதய நோய்களைத் தடுக்கக்கூடியது என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்கவும் மெடிட்டரேனியன் உணவுமுறை உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதிய ஆய்வுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் உள்ள ஆசிய மகளிர் சுகாதாரத்துக்கான உலகளாவிய மையம் தலைமை தாங்குகிறது.
UPCite எனும் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
“ஆசியர்களும் வெள்ளைக்காரர்களும் மரபணு அடிப்படையில் வித்தியாசமானவர்கள். நீரிழிவு நோய் (இரண்டாவது வகை), இதய நோய் ஆகிய நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அவர்களிடையே வேறுபடுகின்றன. எனவே, ஆசிய மகளிருக்குத் தேவையான, துல்லியமான பரிந்துரைகளை முன்வைக்க இந்த ஆய்வு நடத்தப்படுகிறது,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் உள்ள ஆசிய மகளிர் சுகாதாரத்துக்கான உலகளாவிய மையத்தின் இயக்குநரான பேராசிரியர் சாங் குயிலின் தெரிவித்தார்.
மகளிர் சுகாதார மாநாடு 2024ல் கலந்துகொண்டு பேசிய சுகாதாரம் மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் புதிய ஆய்வை வரவேற்றுப் பாராட்டினார்.
இந்த மாநாடு அக்டோபர் 24ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.