சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியச் சமயப் பள்ளிகளிலும் சிறாரைப் பாதுகாக்கப் போதுமான நடைமுறைகள் நடப்பில் இருந்தாலும் அவை மட்டும் போதாது என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியச் சமயப் பள்ளிகளிலும் சிறாரைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி மறுஆய்வு செய்ய பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பள்ளிவாசல் ஒன்றில் சமயப் போதனையாளர் என்று தம்மைத் தாமே கூறிக்கொண்ட ஒருவர் அனுமதியின்றி சமய வகுப்புகளை நடத்தியபோது இரண்டு சிறுவர்களைப் பாலியல் ரீதியான வன்கொடுமை செய்ததை அடுத்து திரு ஸாக்கி அவ்வாறு கூறினார்.
புதிதாக அமைக்கப்படும் பணிக்குழு, சிறாரும் இளையர்களும் எவ்வாறு பாதுகாப்பான முறையில் சமய வழிகாட்டிகளைப் பெறலாம் என்பதை ஆராயும்.
இணைப் பேராசிரியர் ரஸ்வானா பேகமும் சமயப் போதகர் ஃபதுர்ரஹ்மான் டாவூட்டும் பணிக்குழுவை வழிநடத்துவர். பணிக்குழு அதன் ஆய்வுகளை திரு ஸாக்கியிடம் சமர்ப்பிக்கும்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி, பாலியல் வன்கொடுமை, மானபங்கம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 37 வயது ஆடவருக்கு 27 ஆண்டுகள், 10 மாதங்கள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுவர்களைப் பள்ளிவாசலில் சந்தித்த ஆடவர், அவர்களைத் தந்தையைப் போல பார்த்துக்கொண்டதுடன் சமய வழிகாட்டியாகவும் இருந்தார்.
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த ஆடவர் சிறுவனைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார். அந்தச் சிறுவனின் வயது அப்போது ஆறிலிருந்து எட்டுக்குள் இருந்தது.
11லிருந்து 12 வயதுக்கு இடைப்பட்ட மூத்த சிறுவனையும் ஆடவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
சம்பவம் குறித்து பேசிய ஸாக்கி, “அந்தச் சிறுவர்கள் அமைதியையும் சமய வழிகாட்டுதலையும் நாடி பள்ளிவாசலுக்கு வந்தனர். துரதிஷ்டவசமாக அவர்கள் தவறான நபரைச் சந்தித்தனர். அதுதான் எனக்கு சினமூட்டுகிறது,” என்றார்.
இந்நிலையில், கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பிள்ளைகளும் இளையரும் உள்ள சமயக் குழுக்களில் அவ்வப்போது சோதனைகள் நடத்த பள்ளிவாசல்கள் முடிவெடுத்துள்ளன என்றார் அவர்.


