தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்குச் சந்தையில் கூடுதல் நிறுவனங்கள் பட்டியலிடப்பட வரிச்சலுகைகள்

2 mins read
4f9e022f-ef1a-4365-9880-68312127be9c
சிங்கப்பூர் பங்குச் சந்தையின் ஈர்ப்புத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சியாக, 2024 ஆகஸ்ட்டில் பங்குச் சந்தை மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

உள்ளூர் பங்குச் சந்தைக்கு உந்துதல் தரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, கூடுதலான நிறுவனங்களும் நிதி மேலாளர்களும் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிட வரிச்சலுகைகள் அறிமுகம் செய்யப்படும் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் கணிசமான அளவு முதலீடு செய்யும் நிதி மேலாளர்களுக்கும் வரிச்சலுகைகள் இருக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூர் பங்குச் சந்தையின் ஈர்ப்புத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சியாக, 2024 ஆகஸ்ட்டில் அமைக்கப்பட்ட பங்குச் சந்தை மறுஆய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட முதல் தொகுப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக இவை அமைகின்றன.

“வணிக நிறுவனங்கள் விரிவடைந்துவரும் வேளையில், கூடுதல் நிதி பெற பங்குச் சந்தையில் அவை பட்டியலிடலாம். வெளிநாடுகளில் கணிசமான வருவாய் பெறும் பெரிய நிறுவனங்கள், பொதுவாக வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடுவதைத் தேர்வுசெய்யும்.

“ஆனால், சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் பிரதானமாக கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்குகூட சிங்கப்பூர் பங்குச் சந்தை ஈர்ப்புடையதாக இல்லை எனக் கருத்துகள் நிலவுகின்றன,” என்றார் பிரதமர் வோங்.

போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட் தலைமை தாங்கும் அந்த மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை தாம் ஏற்றுள்ளதாக திரு வோங் சொன்னார்.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் புதிதாக பட்டியலிடப்பட நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் பங்குகளுக்கான முதலீட்டுத் தேவையை அதிகரிப்பதையும் இந்த நடைமுறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

முதலாவதாக, பொதுப் பங்கு நிறுவனங்களாகும் எண்ணம் கொண்டுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு நிறுவன வருமான வரிக்கழிவு வழங்கப்படும். முதன்முதலாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட விரும்பும் நிறுவனங்களுக்கு 20 விழுக்காடு வரிக்கழிவு கிடைக்கும். மற்ற பங்குச் சந்தைகளிலும் அதே பங்குகளைப் பட்டியலிட விரும்பும் நிறுவனங்களுக்கான வரிக்கழிவு 10 விழுக்காடாக இருக்கும்.

இரண்டாவதாக, சிங்கப்பூரில் பட்டியலிட விரும்பும் புதிய நிதி மேலாளர்களுக்கான மேம்பட்ட சலுகையுடன் கூடிய வரி விகிதம் இருக்கும்.

அவர்களுக்கு தகுதிபெறும் வருமானத்தில் 5 விழுக்காடு சலுகையுடன் கூடிய வரி விகிதம் கிடைக்கும்.

கடைசியாக, சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் கணிசமாக முதலீடு செய்யும் நிதி மேலாளர்களுக்கான வரிவிலக்கும் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்