வரி ஏய்ப்பு: 70 பயணிகள் பிடிபட்டனர்

2 mins read
b17c33b0-ee94-4851-9cb8-efa2f223944e
10,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 260 வாகனங்களும் சோதனையிடப்பட்டன. சிங்கப்பூரின் நிலம் வழி சோதனைச்சாவடிகள், கடல்வழிச் சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் 14,000க்கும் மேற்பட்ட பயணப் பெட்டிகள், கைப்பைகள் சோதனையிடப்பட்டன. - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் வரி செலுத்த தவறிய 70 பயணிகள் பிடிபட்டனர்.

அமலாக்கப் பிரிவுகள் ஒன்றிணைந்து ஒரு வாரத்துக்கு நடத்திய அதிரடி நடவடிக்கையின் விளைவாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்.

இத்தகவலை அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (ஜனவரி 22) வெளியிட்டனர்.

அதிரடி நடவடிக்கையைச் சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவற்றுடன் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இணைந்து நடத்தியது.

10,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 260 வாகனங்களும் சோதனையிடப்பட்டன.

சிங்கப்பூரின் நிலம் வழி சோதனைச்சாவடிகள், கடல்வழிச் சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் 14,000க்கும் மேற்பட்ட பயணப் பெட்டிகள், கைப்பைகள் சோதனையிடப்பட்டன.

அதிரடி நடவடிக்கையின்போது சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பொருள்கள், வரி விலக்கு சலுகைக்கு உட்படாத மதுபானம், பொருள் சேவை வரி இறக்குமதி நிவாரணத்துக்கு உட்படாத பொருள்கள் ஆகியவற்றுக்கான வரி செலுத்தப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

செலுத்தப்படாத வரியின் மதிப்பு $3,398.

மொத்தம் $21,990 அபராதம் விதிக்கப்பட்டது.

பயணிகள் இருவர் அனுமதிக்கப்பட்ட $20,000 வரம்புக்கும் அதிகமான ரொக்கம் வைத்திருந்தனர். அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை அல்லது துல்லியமாக தொகையைத் தெரிவிக்கவில்லை என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் குறிப்பிட்டது.

ஜனவரி 13ஆம் தேதியன்று 46 வயது வெளிநாட்டுப் பெண் பயணி ஒருவர் $24,965 பெறுமானமுள்ள வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.

அப்பெண்ணுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் 49 வயது வெளிநாட்டு ஆடவர் சிங்கப்பூரிலிருந்து $91,789 பெறுமானமுள்ள ரொக்கக் காசோலைகளைக் கொண்டு செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் ஜனவரி 14ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

அவருக்கு $9,000 அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்