ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் மற்றொரு டாக்சியுடன் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 60 வயது டாக்சி ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்தில் சம்பந்தப்பட்ட 60 வயது டாக்சி ஓட்டுநர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மற்றொரு டாக்சி ஓட்டுநரான 72 வயது ஆடவர், காவல்துறை விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
ஜூன் 12 இணையத்தில் பரவிய விபத்திற்குப் பிந்திய காணொளியில், இரண்டு கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சிகள் அடித்தளச் சரிவின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
அவற்றில் ஒரு டாக்சி கடுமையாகச் சேதமடைந்துள்ளதைக் காணமுடிகிறது.
சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரும் இருப்பதோடு, தரையில் கிடந்த ஒருவருக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சையளிப்பதையும் காண முடிகிறது.
சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றுக்கும் ஜூவல் சாங்கிக்கும் சேவை வழங்கும் டாக்சி வரிசைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்தக் காணொளியுடன் இணைக்கப்பட்ட வாசகத்தில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த கம்ஃபர்ட்டெல்குரோ, ஜூன் 12ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்றும், விபத்தின்போது டாக்சிகளில் பயணிகள் யாரும் இல்லை என்றும் தெரிவித்தது.
“பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்; மேலும் அதிகாரிகளின் விசாரணைகளுக்கு நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்,” என்று அந்த டாக்சி நிறுவனம் கூறியது.

