அங் மோ கியோவில் தீப்பிடித்த டாக்சி: ஓட்டுநரும் பயணியும் காயம்

அங் மோ கியோவில் தீப்பிடித்த டாக்சி: ஓட்டுநரும் பயணியும் காயம்

1 mins read
b17b4351-3b10-47c6-8607-d98f8d7c927d
மரத்தில் மோதிய அந்த டாக்சி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. - படம்: சிங்கப்பூரா சேனல்/ஃபேஸ்புக்

அங் மோ கியோவில் டாக்சி ஒன்று விபத்துக்குள்ளாகித்  தீப்பற்றியதைத் தொடர்ந்து, அதன் ஓட்டுநரும் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இயோ சூ காங் சாலைக்கும் ஹவ்காங் அவென்யூ 2க்கும் இடையிலான சந்திப்பில் இந்த விபத்து நடந்தது.

சனிக்கிழமை (30 மே) பிற்பகல் கிட்டத்தட்ட 4 மணியளவில் விபத்துப் பற்றிய தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

சம்பவ இடத்திற்குச் சென்ற குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் காரின் தீயை அணைத்தனர்.

சம்பந்தப்பட்ட 68 வயது டாக்சி ஓட்டுநரும் அவரது டாக்சியில் பயணம் செய்த 58 வயதுப் பெண் பயணியும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

‘சிங்கப்பூர் இன்சிடென்ட்ஸ்’ (Singapore Incidents) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட காணொளியில், மஞ்சள் நிற டாக்சி ஒன்று சாலையின் நடுத் தடுப்பில் இருந்த மரத்தில் மோதியிருப்பதைக் காணமுடிகிறது.

அத்துடன், இயந்திர மூடியின் அடியிலிருந்து வெள்ளை நிறப் புகை வருவதையும் காணமுடிகிறது.

‘சிங்கப்பூரா சேனல்’ (Singapura Channel) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களில், டாக்சியின் இயந்திர மூடி விடுபட்டு, இயந்திரப் பகுதி வெளியில் தெரிவதைக் காணமுடிகிறது. வாகனத்தின் முன்பக்கத் தடுப்பும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.

மேல்விவரங்களுக்காக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ், ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
டாக்சிவிபத்துதீகாயம்