போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியின் கையைத் தமது காரின் சன்னலுக்குள் சிக்க வைத்து, காரை நகர்த்தி எலும்பு முறிவை ஏற்படுத்திய டாக்சி ஓட்டுநர் ஒருவருக்கு ஏழு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெரெமியா ஓங் செங் ஹுவீ, 72, அந்த அதிகாரியின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் முன்யோசனையின்றி செயல்பட்டு அவருக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், எட்டு மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
2022 அக்டோபர் 9ஆம் தேதி மாலை 5 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த அந்த அதிகாரி, ஓங் ஃபேரர் சாலையில் வாகனம் ஓட்டியபடியே கைப்பேசியைப் பயன்படுத்துவதைக் கண்டார்.
சாலையோரமாக வாகனத்தை நிறுத்தும்படி ஓங்கிற்குச் சைகை காட்டிய அந்த அதிகாரி, அடையாள அட்டையையும் ஓட்டுநர் உரிமத்தையும் ஒப்படைக்குமாறும் டாக்சியிலிருந்து வெளியேறுமாறும் ஓங்கிடம் கூறினார்.
ஓங் அதற்கு இணங்க மறுத்தபோது, திறந்திருந்த சன்னல் வழியாக அந்த அதிகாரி டாக்சிக்குள் கையை நுழைத்து, வாகன இயந்திரத்தை இயக்கும் கருவியை (ignition switch) அணைக்க முற்பட்டார்.
அதிகாரியின் கை காருக்குள் இருந்தபோதே, ஓங் சன்னல் கண்ணாடியை ஏற்றி, அதிகாரியின் கையைச் சன்னலுக்கும் கதவுச் சட்டத்திற்கும் இடையில் சிக்க வைத்தார்.
காரை நிறுத்துமாறு அதிகாரி சொல்லியும், ஓங் காரைச் சிறிது சிறிதாகப் பலமுறை முன்னோக்கி நகர்த்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அவ்வழியே சென்ற ஒருவர் தலையிட்ட பின்னரே ஓங் இறுதியாக இணங்கி, டாக்சியிலிருந்து வெளியேறியதாக உதவி அரசாங்க வழக்கறிஞர் சாய் ஜெர் யுவான் நீதிமன்றத்தில் கூறினார்.
அதிகாரியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியின் காரணமாக அவரது வலது தோள்பட்டையின் அசைவு மட்டுப்படுத்தப்பட்டது. அவருக்கு 14 நாள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.