வூஹான் கிருமித் தொற்றால் தனிமைப்படுத்தப்படும் டாக்சி ஓட்டுநர் தங்கள் டாக்சி வாடகைக் கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை என்று கம்ஃபர்ட்டெல்குரோ மற்றும் பிரிமியர் டாக்சி நிறுவனங்கள் நேற்று தெரிவித்தன.
சீனாவிலிருந்து திரும்பும் தனது ஊழியர்களை சில நாட்கள் விடுப்பில் சென்றுவிட்டு பின்னர் வேலைக்குத் திரும்புமாறு பிரிமியர் நிறுவனம் ஊக்கப்படுத்துகிறது. சீனாவுக்குச் சென்று திரும்பும் தனது ஊழியர்கள் 14 நாட்கள் விடுப்பில் செல்லுமாறு கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீனாவுக்குச் சென்று திரும்புவோர் 14 நாள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்ற அரசாங்க உத்தரவைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் உள்ளன.
"டாக்சி ஓட்டாமல் இருப்பது அவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதிக்கக்கூடும். ஆகவேதான் எங்களால் ஆன உதவியை அறிவித்துள்ளோம்," என்றார் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு யாங் பான் செங்.
கட்டாய விடுப்பு சம்பளத்துடன் கூடிய விடுப்பாக எடுத்துக்கொள்ளப்படும். அது அவர்களின் வருடாந்திர விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படாது.
தேசிய டாக்சி சங்கம், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆகியவற்றுடன் கம்ஃபர்ட்டெல்குரோ இணைந்து உதவிகளைச் செய்யும் என்றும் கூறப்பட்டது.

