உரிமமின்றிப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவருக்கு உதவியாகச் செயல்பட்ட ஆசிரியர்மீது மேலும் மூன்று குற்றச்சாட்டு புதன்கிழமை (ஜனவரி 28) சுமத்தப்பட்டுள்ளன.
ஜெரால்டின் குவெக் யி லிங் எனும் அந்த 42 வயது ஆசிரியர், ஏற்கெனவே 14 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
ஆதாரங்களை அழித்ததற்கான ஒரு குற்றச்சாட்டும் கடன் முதலையாகச் செயல்பட வேறொரு நபருக்கு உதவியதற்காக இரு குற்றச்சாட்டுகளும் குவெக்மீது தற்போது சுமத்தப்பட்டுள்ளன.
முறையான உரிமம் பெறாமல் மற்றவர்களுக்குப் பணம் கொடுத்தவரின் பெயர், டிராவிஸ் ஹெங் என்று சொல்லப்பட்டது.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் புரிந்ததாகக் கூறப்பட்டது.
அவர் செயின்ட் பேட்ரிக் பள்ளியில் ஆங்கில மொழி, இலக்கியத் துறையின் தலைவராக இருந்தது தெரியவந்தது. புதன்கிழமை நிலவரப்படி, பள்ளியின் இணையப் பக்கத்தில் துறைத் தலைவர்களின் பட்டியலிலிருந்து அவரின் பெயர் அகற்றப்பட்டிருந்தது.
அண்மைய குற்றச்சாட்டுகளின்படி, பாசிர் ரிஸ், கேலாங் பாரு உட்பட பல வட்டாரங்களில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளில் வசிக்கும் ஹெங்கிடம் கடனைப் பெற்றுகொண்டு திருப்பிக்கொடுக்காத குடியிருப்பாளர்களை குவெக் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

