இரு பெண் சகாக்களைத் தவறான முறையில் காணொளி எடுத்த உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பமாக இருந்த சக ஊழியர் ஒருவரின் பாவாடைக்கு அடியில் காணொளி எடுத்ததற்காக வாங் ஸியாங்லின், 36, விசாரிக்கப்பட்டபோது, பள்ளியின் தாய்ப்பால் கொடுக்கும் அறையில் மற்றொரு பெண் ஊழியர் தாய்ப்பால் சுரந்ததையும் அவர் காணொளி எடுத்ததைக் காவல்துறை கண்டறிந்தது.
பெண்களை ரகசியமாக படமெடுத்த இரு குற்றச்சாட்டுகளை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) வாங் ஒப்புக்கொண்டார். அவரைப் பிணையில் எடுத்த அவரின் மனைவியும் அவருடன் நீதிமன்றத்தில் இருந்தார்.
பாதிக்கப்பட்ட இரு பெண்களும் 30, 34 வயதுடையவர்கள். 2021, 2022ல் வாங் குற்றம் புரிந்தபோது அப்பள்ளியில் அவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் காரணமாக அவர்ளின் பெயர்களும் பள்ளியின் பெயரும் வெளியிடப்படவில்லை.
தம் மேசைக்கு அடியில் கேமரா ஒன்று இருந்ததைக் கண்டறிந்த அந்த 30 வயது ஆசிரியர், தமக்கு எதிராக வாங் குற்றம் புரிந்தபோது கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் இருந்தார்.
2022 பிப்ரவரியில் அவர் சிறிய உடையுடன் வேலைக்கு வந்ததைக் கவனித்த வாங், அப்பெண்ணின் பாவாடைக்கு அடியில் காணொளி எடுக்க விரும்பியதை ஒப்புக்கொண்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் டே ஜியா என் கூறினார்.
பணியளர் அறையில் அந்தப் பெண் ஆசிரியரின் மேசைக்கு அடியில் நாடாவைக் கொண்டு படமெடுக்கும் கருவியை வாங் வைத்தார்.
அதே தினம் பிற்பாடு, தம் மேசைக்கு அடியில் இருந்த முக்காலி மீது தம் கால்களை வைத்தபோது, ஏற்கெனவே இல்லாத ‘செவ்வகக் கருவி’ ஒன்றை அப்பெண் கவனித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேசைக்கு அடியில் குனிந்து பார்த்தபோது, அந்தப் படமெடுக்கும் கருவியைக் கண்டறிந்து பள்ளி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தினார்.
அக்கருவி, குறைந்தது 17 நிமிடக் காட்சிகளைப் பதிவுசெய்ததாக வழக்கறிஞர் கூறினார்.
காவல்துறைக்கு அப்பெண் அளித்த வாக்குமூலத்தில், இந்த ஒட்டுமொத்த சம்பவத்தால் தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஆண் சகாக்களிடம் எச்சரிக்கையாக இருந்து வருவதாகவும் சொன்னார்.
கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் தாம் இருந்ததால், இச்சம்பவம் தம் உணர்வுகளையும் நலனையும் சமாளிக்க இன்னும் சிரமப்படுத்தியதாக அவர் கூறினார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, வாங்கின் கைப்பேசியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது, பள்ளியின் தாய்ப்பால் கொடுக்கும் அறையில் இன்னொரு பெண் தாய்ப்பால் சுரந்ததைக் காட்டும் புகைப்படங்களை அதிகாரிகள் வாங்கின் கைப்பேசியில் கண்டறிந்தனர்.
2021ல் குறைந்தது மூன்று தருணங்களில் வாங் அந்த அறையில் படமெடுக்கும் கருவியை வைத்து, அந்தப் பெண் ஆசிரியர் தாய்ப்பால் சுரந்ததைக் காணொளி எடுத்தது தெரியவந்துள்ளது.

