தகுந்த ஆதரவு இருந்தால் ஒவ்வொரு மாணவரும் வெற்றிபெற முடியும் என்பதை உறுதியாக நம்புகிறார் கல்வியில் அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கான அதிபர் விருதினை பெற்றுள்ள ஆசிரியை உஷா கிருஷ்ணசாமி, 46.
தம்முடன் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பார்வைக் குறைபாடுள்ள பிள்ளைகள்மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களையும் வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற ஆசிரியரைப் பார்த்து, உள்ளடக்கிய வகுப்பறையை உருவாக்கும் எண்ணம் பிறந்ததாகக் கூறினார் தமிழாசிரியை உஷா.
ஏறத்தாழ 23 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இவர், சிறப்புக் கல்வித் தேவைகளுக்கான ஆசிரியர் தலைவராகவும் பங்காற்றுகிறார்.
தற்போது நார்த் வியூ தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் திருவாட்டி உஷா, “சிறு வயதிலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்பதே என் கனவு. அதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறையை உருவாக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் கொண்டுள்ளேன்,” என்றார்.
“ஒரு வகுப்பறையில் மாறுபட்ட திறன் கொண்ட மாணவர்கள் இருக்கலாம். கற்றல் குறைபாடு, நடைமுறைகளில் சிரமம் என மாறுபட்ட பிரச்சினைகளும் இருக்கலாம். ஒருவருக்குப் பயன்படும் முறை மற்றொருவருக்குப் பயன்படுவதில்லை. இது குறித்த அடிப்படைப் புரிதல் இருப்பது முக்கியம்,” என்றார் சிறப்புத் தேவைகளுடைய மாணவர்களை ஆதரிக்க ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கிவரும் உஷா.
சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு ஆதரவு தேவைப்படும் அதே வேளையில் அதிக ஆதரவளிப்பதும் தவறு என்பதையும் நாளடைவில் அவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் சரியான முறைகளில் ஆதரவு வழங்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்குக் கூடுதல் நேரமும் உழைப்பும் தேவைப்படுமென்றாலும், மாணவர்களின் வெற்றியைப் பார்க்கும்போது அவை மறைந்துவிடும் என்கிறார் திருவாட்டி உஷா.
தமது கற்பித்தல் முறைகளை மேம்படுத்த சிறப்புக் கல்வித் தேவைக்கான அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசித்துவரும் இவர், தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கும் வித்தியாசமான முறைகளைக் கையாண்டு வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
பாடல்மூலம் சொற்களை அறிமுகப்படுத்துதல், செய்கைகள்மூலம் அவற்றின் பொருளை விளங்க வைத்தல், எழுத்துகளை மணலில் எழுதி உணர்வுவழி அவற்றை நினைவில் வைத்திருக்க உதவுதல் என எண்ணற்ற கற்பித்தல் முறைகளை வகுப்பில் இவர் செயல்படுத்துகிறார்.
வரிகளை ஒலிவடிவமாக்குதல், மாணவர் கற்றல்தளம் எனத் தொழில்நுட்பத்தின் ஆதரவுடனும் மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கிறார் ஆசிரியை உஷா.
“மொழியின் முக்கியத்துவத்தைச் சுவாரசியமாகவும், இருவழித் தொடர்புடனும் கற்பிக்கிறேன். தடுமாற்றத்துடன் பேசும் ஒருவரைப் பார்த்துச் சிரிப்பதை விடுத்து, ஒருவருக்கொருவர் ஊக்குவிக்க வலியுறுத்துகிறேன்,” என்கிறார் அவர்.
“ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு வகைச் சிக்கலை எதிர்நோக்கலாம். அவர்களுடன் பேசி அவர்களுக்கான தீர்வுகளை ஆலோசனைகளாக வழங்குகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
தம் மனத்திற்கு நெருக்கமான பணியை ஆர்வத்துடன் மேற்கொண்டதற்கு அதிபர் விருது கிடைத்துள்ளது பெருமையானதெனக் குறிப்பிட்ட திருவாட்டி உஷா, இது அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறையை உருவாக்கும் பயணத்தில் மேலும் துடிப்புடன் ஈடுபட ஊக்குவிக்கும் என்றும் சொன்னார்.
சிறந்த ஆசிரியர்களுக்கான அதிபர் விருது
இளைய தலைமுறையினரை வடிவமைப்பதில் அர்ப்பணிப்புடன் கடின உழைப்பைச் சிந்தும் கல்வியாளர்களை அங்கீகரிக்கும் ‘ஆசிரியர்களுக்கான அதிபர் விருது’ இவ்வாண்டு எட்டுப் பேருக்கு வழங்கப்பட்டது.
‘ஃபேர்மோன்ட்’ ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்ற விழாவில், கல்வியாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்த அதிபர் தர்மன் சண்முகரத்னம், “நமது எதிர்காலத்தை வடிவமைப்போரை நம் கல்வியாளர்கள்தான் வடிவமைக்கிறார்கள்,” என்று கூறி வாழ்த்தினார்.
கடந்த 1998ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் இவ்விருதுக்காக இவ்வாண்டு 4,747 கல்வியாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு, எட்டுப் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

