புதிய வழிகாட்டுதல்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் வரவேற்பு

புதிய வழிகாட்டுதல்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் வரவேற்பு

2 mins read
6039de53-8605-4fcb-9bf8-dbee19e6de4f
கல்வி அமைச்சின் பள்ளிக்கூடங்கள் வேலைத் திட்டக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங். - படம்: சாவ் பாவ்

ஆசிரியப் பணியில் எல்லைகளை வகுக்க புதிய வழிகாட்டுதல்கள் உதவும் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் தெரிவித்து உள்ளனர்.

புதிய வழிகாட்டுதல்களின் உதவியோடு ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான அவசரமற்ற தகவல்களைப் பரிமாறிக்கொள்வது குறைக்கப்படும்.

பள்ளிக்கூட நேரத்திற்குப் பின்னர், வேலை தொடர்பான தகவல்களுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் தங்களது சொந்த கைப்பேசி எண்ணை பள்ளிக்கூடப் பணிக்கு பகிர்ந்துகொள்ள வேண்டி வராது என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் செப்டம்பர் 18ஆம் தேதி கூறியிருந்தார்.

இவ்வாறு செய்வது, ஆசிரியப் பணியில் எல்லைகளை வகுக்கவும் மாணவர்களுக்கான செயல்முறை வகுப்புகளை நடத்துவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தவும் உதவும் என்றும், கல்வி அமைச்சின் பள்ளிக்கூடங்கள் வேலைத் திட்டக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியபோது அவர் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளைக் கவனிக்கவும் நேரம் கிடைக்கும் என்றார் திரு சான்.

புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்து ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு கருத்து கேட்டது.

தங்களது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்குரிய சாதகமான நடவடிக்கை என்று புதிய வழிகாட்டுதல்களை அவர்கள் வரவேற்றனர்.

இருப்பினும், அந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் நடைமுறை சவால்கள் இருப்பது பற்றி சிலர் கவலை தெரிவித்தனர்.

பெற்றோர்கள் மட்டுமல்லாது மாணவர்களும்கூட பள்ளிக்கூட நேரத்திற்குப் பின்னர் கைப்பேசித் தகவல்கள் அனுப்புவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஊடகங்களிடம் பேசுவதற்கான அனுமதியைப் பெறவில்லை என்பதால் அந்த ஆசிரியர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

புதிய வழிகாட்டுதல்களின் வெற்றி என்பது ஒவ்வொரு பள்ளிக்கூடமும் அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதைப் பொறுத்தது என்று ஓர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை கூறினார்.

அத்துடன், வழிகாட்டுதல்களை பெற்றோரிடத்திலும் மாணவர்களிடத்திலும் பள்ளிகள் எடுத்துச் சொல்லும் விதத்தைப் பொறுத்தும் அதன் ஆதரவு அமையும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்