மலேசியாவின் அனைத்துக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள தானியங்கிக் குடிநுழைவுக் கதவுகளில் (autogate) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால், சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மலேசியர்கள் பயன்படுத்தும் தானியங்கிக் குடிநுழைவுக் கதவுகளில் எந்தக் கோளாறும் இல்லை. அதனால் அவர்கள் வழக்கம்போல விரைவாகக் குடிநுழைவு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தத் தொழிநுட்பக் கோளாறு வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மலேசியாவில் 200க்கும் அதிகமான தானியங்கிக் குடிநுழைவுக் கதவுகள் பாதிக்கப்பட்டன.
இந்தக் கோளாற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 2, ஜோகூரில் உள்ள பிஎஸ்ஐ (BSI), கேஎஸ்ஏபி (KSAB) சோதனைச் சாவடிகள்.
தொழில்நுட்பக் கோளாற்றைச் சரி செய்யத் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மலேசியாவின் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஜோகூரில் உள்ள பிஎஸ்ஐ (BSI), கேஎஸ்ஏபி (KSAB) சோதனைச் சாவடிகள் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது மேல் விவரங்களை வெளியிட்டும் வருகின்றன.
சிங்கப்பூரர்கள் அவதி
சனிக்கிழமை (ஜூலை 19) காலை 11.30 மணியிலிருந்து பேருந்து வாயிலாக மலேசியா செல்லும் சிங்கப்பூர்வாசிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பேருந்துப் பயணிகளுக்கான மலேசியக் குடிநுழைவு கட்டடம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குடிநுழைவுச் சோதனைக்காக அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூரர்கள் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்று அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பயணம் நேரம் கூடுதலாக இருக்கும் என்று பயணிகளுக்குத் தகவல் வெளியிட்டது. பயணிகளுக்குத் தேவையான உதவி வழங்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.