பேருந்துகள் வந்துசேரும் நேரத்தைக் கணிப்பதில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பேருந்து வருகை நேரக் கணிப்பு இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகளால் நேரம் தவறாகக் காட்டப்பட்டதும் பேருந்து வர நீண்டநேரமாகும் என்று அது தவறுதலாகத் தெரிவித்ததும் கவனத்துக்கு வந்ததாக ஆணையம் புதன்கிழமை (ஜனவரி 21) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நேரம்தான் தவறாகக் காட்டப்பட்டதே தவிர, பேருந்துச் சேவைகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப அவை வழக்கம்போல இயங்குகின்றன என்றும் அது தெரிவித்தது.
பயணிகள் தங்களது பேருந்து எப்போது வரும் என்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையத்தில் இருந்து தெரிந்துகொள்ள கணிப்பு முறை உதவுகிறது.
எதிர்பார்க்கப்படும் நேரம் ஒவ்வொரு பேருந்துக்கும் காட்சித் திரைகளில் காட்டப்படும். அத்தகைய திரைகள் பேருந்து நிலையங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் உள்ளன.
அவை தவிர, மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி (MyTransport.SG) கைப்பேசிச் செயலி மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகள் வாயிலாகவும் அந்த உத்தேச நேரத்தைப் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும்.
ஆனால், நேரத்தைத் தொழில்நுட்பம் தவறாகக் கணித்ததை முதன்முதலாக ஆணையம் ஜனவரி 10ஆம் தேதி கண்டறிந்தது. ஏறத்தாழ ஒருவார காலம் அந்தத் தவறான நேரம் காட்டப்பட்டதையும் அது தெரிந்துகொண்டது.
சில பேருந்துகளுக்கான நேர அறிவிப்பு முறையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது, விசாரணையில் தெரியவந்ததாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தவறான பேருந்து வருகை நேரம் காட்டப்பட்டதற்காக மன்னிப்புக் கேட்டுள்ள ஆணையம், கோளாற்றைச் சரிசெய்ய தனது பொறியாளர்களும் வருகை நேரக் கணிப்பு இயந்திரக் குத்தகையாளர்களும் பேருந்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது.

