மெல்பர்னிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், வானில் பறந்துகொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புதன்கிழமை (அக்டோபர் 29) புறப்பட்ட இடத்துக்குத் திரும்பியது.
இதுகுறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு எஸ்ஐஏ அளித்த பதிலில், எஸ்கியூ228 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மெல்பர்ன் விமான நிலையத்திற்குத் திரும்பியது என்றும் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக எரிபொருளை வெளியேற்றியது என்றும் தெரிவித்தது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றிய விவரங்களை எஸ்ஐஏ வழங்கவில்லை.
219 பயணிகளையும் 17 பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற இந்த போயிங் 777 விமானம், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5.47 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் மதியம் 2.47 மணி) பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று எஸ்ஐஏ கூறியது. இந்த விமானம் உள்ளூர் நேரப்படி மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டது.
அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் வழக்கம்போல விமானத்திலிருந்து வெளியேறினர் என்றும் அது மேலும் கூறியது.
எஸ்ஐஏவின் தரைத்தள பொறியியல் குழு, கோளாற்றைச் சரிசெய்ய முற்பட்ட வேளையில், பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக எஸ்ஐஏ தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் ஏற்பட்ட சிரமத்துக்காக எஸ்ஐஏ மன்னிப்பு கோரியது.
“எங்கள் வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் பாதுகாப்பே எங்களின் தலையாய முன்னுரிமையாகும்,” என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பல ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்த விமானம் திருப்பிவிடப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டன.

