தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பக் கோளாறு: எஸ்ஐஏ விமானம் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பியது

2 mins read
cd47308f-54f4-460a-b0b9-750d2b662071
ஃபிராங்ஃபர்ட்டிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானப் பயணம் சராசரியாக 12 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புறப்பட்ட இடத்துக்குத் திரும்பியது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்ஐஏ, வியாழக்கிழமை ஃபிராங்பர்ட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட மூன்று மணிநேரம் 40 நிமிடங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஸ்கியூ325 விமானம் ஃபிராங்ஃபர்ட்டுக்கு திரும்பியது என்று கூறியது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்த விவரங்களை எஸ்ஐஏ வழங்கவில்லை.

அந்த ஏர்பஸ் ஏ380 வகை விமானத்தில் 401 பயணிகளும் 28 பணியாளர்களும் இருந்தனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.57 மணிக்கு அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக எஸ்ஐஏ கூறியது. அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் சாதாரணமாக விமானத்திலிருந்து வெளியேறியதாக அது சொன்னது.

வெள்ளிக்கிழமை மாலை 4.05 மணிக்குச் சிங்கப்பூர் வந்திறங்கத் திட்டமிடப்பட்டிருந்த அந்த விமானம், ரத்து செய்யப்பட்டதாக சாங்கி விமான நிலையத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டது.

ஃபிராங்ஃபர்ட்டிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானப் பயணம் சராசரியாக 12 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

‘ஃபிளைட்ரேடார்24’ எனும் விமானத் தரவுத் தளத்தின்படி, அஸர்பைஜானுக்கு அப்பால், ‘காஸ்பியன் கடலுக்குமேல் அந்த விமானம் திரும்பிச் சென்றதாகத் தெரிகிறது.

அனைத்துப் பயணிகளுக்கும் உணவுப் பற்றுச்சீட்டுகளும் தங்குவிடுதி வசதியும் செய்துத் தரப்பட்டதாகவும் அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் எஸ்ஐஏ தெரிவித்தது.

“எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்,” என்று கூறிய எஸ்ஐஏ, பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்காக மனபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்