சிங்கப்பூரின் மூத்தோருக்கான உதவிகளுடன் கூடிய முதல் பொது வீடமைப்பு வசதியில் கீழே விழுந்த 85 வயதுப் பெண்ணுக்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நேரத்தில் உதவி கிடைக்கவில்லை.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஹார்மனி வில்லேஜ் வளாகத்தில் வசித்துவந்த பெண், இம்மாதம் 2ஆம் தேதி கீழே விழுந்தவுடன் எச்சரிக்கை பொத்தானை அழுத்தியிருந்தார்.
தொழில்நுட்பக் கோளாற்றால் உதவிக் கிடைக்காமல் அந்தப் பெண்ணின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
வீடமைப்பு வளாகத்தில் வசிப்போருக்கு அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்கென சுகாதார அமைச்சால் ‘வென்கார்ட் ஹெல்த்கேர்’ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
அழைப்புப் பொத்தானைப் பொருத்திய நிறுவனத்துடன் நடத்தப்பட்ட தொடக்கக் கட்ட சோதனையில் பாதிப்பு ஏற்படுத்திய தொழில்நுட்பக் கோளாறு அடையாளம் காணப்பட்டதாக வென்கார்ட் ஹெல்த்கேர் குறிப்பிட்டது.
அதையடுத்து ஹார்மனி வில்லேஜ் வளாகத்தில் உள்ள அனைத்து அவசர அழைப்புப் பொத்தான்களும் சோதிக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட தமது தாயார் சோ ஹொக் லாய், குளித்துக்கொண்டிருந்தபோது கீழே விழுந்தார் என்றும் கழிவறையில் இருந்த அவசர அழைப்புப் பொத்தானை அழுத்தினார் என்றும் பெண்ணின் மகள் மேரி ஆவ் கூறினார்.
நீண்ட நேரமாகியும் உதவிக்கு யாரும் வராததை உணர்ந்த அந்த மூதாட்டி, தம்மைத் தாமே நுழைவாயில் வரை இழுத்துச்சென்றதாகக் கூறினார்.
சம்பவம் தொடர்பில் தமது தாய்க்கு இடுப்புப் பகுதியில் அறுவைச் சிசிச்சை மேற்கொள்ளப்பட்டதாக 62 வயது ஆவ் தெரிவித்தார்.
சோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளித்திருக்கும் என்பதை உணர்வதாக வென்கார்ட் ஹெல்த்கேர் நிறுவனம் சொன்னது.
குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பை ஏற்பதாக சொன்ன அது, கட்டமைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று உறுதியளித்தது.
