பணியிடத்தில் கவனக்குறைவு; மின்தூக்கித் தொழில்நுட்பருக்குச் சிறை

2 mins read
e5365740-e008-432f-9f40-3b1daa8da2de
படம்: - தமிழ்முரசு

கவனக்குறைவால் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மின்தூக்கித் தொழில்நுட்பருக்கு, திங்கட்கிழமை (டிச. 11) ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

வோங் சேர் யோங், 34, மலேசியாவைச் சேர்ந்தவர். வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார சட்டத்தின்கீழ், கவனக்குறைவால் ஒருவருக்கு மரணம் நேரிட காரணமாக இருந்த குற்றத்தை வோங் ஒப்புக்கொண்டார்.

எண் 450 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஏழு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இந்த விபத்து நடந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மின்தூக்கிகளைப் பழுதுபார்க்க ‘டி.கே. எலிவேட்டர்ஸ்’ எனும் நிறுவனம் நியமிக்கப்பட்டது.

அந்நிறுவனத்தில் வோங் தொழில்நுட்பராகப் பணிபுரிந்தார். டி.கே. எலிவேட்டர்ஸ் நிறுவனம் டிகோர் இன்ஜினியரிங் என்ற ஒப்பந்ததாரரைப் பழுதுபார்க்கும் பணிகளைச் செய்ய நியமித்தது.

அந்நிறுவனத்தில் கட்டுமான ஊழியராகப் பணிபுரிந்தவர் 29 வயதான ஹுசைன் முகமது சாஹித். அவர் பயிற்சிபெற்ற மின்தூக்கித் தொழில்நுட்பர் அல்ல.

2021 பிப்ரவரி 27ஆம் தேதி, ஹுசைனையும் அவருடன் பணிபுரிந்த வேறொருவரையும் மின்தூக்கியின் உள்ளே அமைந்துள்ள பொத்தான்களைப் பழுதுபார்க்க அவர்களின் திட்ட மேலாளர் பணித்தார். வோங்கும் அவர்களுடன் பழுதுபார்க்கும் பணிக்குச் சென்றார்.

அந்த இரண்டாம் தளத்தில் இருந்த மின்தூக்கியின் பொத்தான்கள் பழுதாகியிருந்தன. அதைச் சரிசெய்ய வோங்கை மின்தூக்கியின் கட்டுபாட்டு அறையிலிருந்து தனக்கு உதவும்படி ஹுசைன் கூறினார்.

வோங்கும் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தார். மின்தூக்கியை ‘பழுதுபார்த்தல்’ நிலைக்குத் தான் மாற்றியபின் ‘வழக்கமான’ நிலைக்கு மாற்றும்படி வோங் ஹுசைனிடம் கூறினார். ஆனால் ஹுசைன் அதற்கு முன்னதாகவே ‘வழக்கமான’ நிலைப் பொத்தானை அழுத்திவிட்டார். இதனால் மின்தூக்கி செயல்படத் தொடங்கியது.

சம்பவத்தில் ஹுசைனின் இடது கை, மார்புக் கூடு, இடது கால் ஆகியவை மின்தூக்கி நகர்வதற்கான இயந்திரப் பாதைக்கும் மின்தூக்கி விளிம்பிற்கும் இடையேமாட்டிக்கொண்டது. அவருடைய அலறல் சத்தம் கேட்டதும் வோங் மின்தூக்கியை நிறுத்தினார்.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அழைக்கப்பட்டது. அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதன் காரணமாக சம்பவ இடத்திலேயே ஹுசைன் உயிரிழந்ததாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்