பேருந்துகளில் தொழில்நுட்பங்கள், ஓட்டுநர்களுக்குக் கூடுதல் உணவு இடைவேளை

2 mins read
791616f2-07bf-4fee-8255-d8a42975771c
பொதுப் பேருந்து பாதுகாப்பை வலியுறுத்தும் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலுள்ள பொதுப் பேருந்துகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு செயற்குழு வெளியிட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் புதன்கிழமை (மார்ச் 5) ஏற்றுக்கொண்டது.

பேருந்துகளில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், பேருந்து ஓட்டுநர்களின் வேலையிடச் சூழலை மேம்படுத்துதல், சாலைப் பணி நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகிய மூன்று கூறுகளைச் சார்ந்து அப்பரிந்துரைகள் அமைந்தன.

பேருந்தில் பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்குவதில் பயணிகளுக்கும் பங்கு உண்டு. அதனால், பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் மார்ச் 10ஆம் தேதிமுதல் அறிமுகமாகும்.

அவ்விதிமுறைகளுக்கு இணங்காமல் தொந்தரவு கொடுப்போரைப் பேருந்திலிருந்து இறங்கச் சொல்லும் அதிகாரம் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் காவல்துறையையும் அழைக்கலாம்.

ஓட்டுநர் நலன், திறன் மேம்பாடு

பேருந்து ஓட்டுநர்களுக்கான உணவு இடைவேளையை 25 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களாக அதிகரிக்க செயற்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒரு சராசரி நாளன்று, 20 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்களால் தம் முழு 25 நிமிட இடைவேளையையும் எடுக்கமுடிவதில்லை. போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் தாமதமே இதற்குக் காரணம்.

புதிய பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தும்போது, அவற்றின் இயக்க நேரம் இரண்டு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கும் வகையில் திட்டமிடும்படி செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

“நெடுநேரப் பயணங்களால் ஓட்டுநர் கவனக்குறைவுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாவதற்கு வாய்ப்பு உண்டு,” என அது கூறியுள்ளது.

தற்போது இயக்க நேரம் இரண்டு மணி நேரத்துக்குமேல் உள்ள 54 பேருந்து வழித்தடங்களிலும் இயக்க நேரத்தைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அது சுட்டியது.

இதற்கு ஒரு வழி, பயண வழியின் இடையில் பேருந்து ஓட்டுநர்களை மாற்றுவது என நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது. ஆனால், அது செயல்பாட்டில் சவால்மிக்கது, செலவுமிக்கது என்பதை அது சுட்டியது.

நான்கு பேருந்துச் சேவை வழங்குநர்களையும் சார்ந்த பேருந்து ஓட்டுநர்களின் பயிற்சியை மேற்பார்வையிடுவதை எளிதாக்க, பொதுவான புள்ளி முறையையும் அது பரிந்துரைத்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்

சாலைப் பாதுகாப்பை முன்னிட்டு, தற்போது சில பொதுப் பேருந்துகளில் உள்ள மூன்று புதிய தொழில்நுட்பங்கள், அனைத்துப் பொதுப் பேருந்துகளுக்கும் விரிவாக்கப்படவேண்டும் எனச் செயற்குழு பரிந்துரைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவோடு இயங்கும் 360 டிகிரி மோதல் எச்சரிக்கைத் தொழில்நுட்பம், ஓட்டுநரின் கண் அசைவுகளைக் கண்காணிக்கும் உடற்சோர்வுக்கு எதிரான தொழில்நுட்பம், பக்கவாட்டுக் கண்ணாடியைப்போல் செயல்படும் உயர்தரப் புகைப்படக் கருவிகள் ஆகியவையே அத்தொழில்நுட்பங்கள்.

மேம்பட்ட பேருந்து நிறுத்தங்கள், சாலைப் பணிகள்

சாலைப் பணி விதிமுறைகளை மீறி, பொதுப் பேருந்துகளின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கான அபராதங்களை அதிகரிக்கும்படி செயற்குழு பரிந்துரைக்கிறது.

ஏறக்குறைய 1,600 பேருந்து நிறுத்தங்களை மறுஆய்வுசெய்து, பேருந்துத் தடங்களையும் பேருந்து முன்னுரிமைக் கட்டங்களையும் தேவைக்கேற்ப அறிமுகப்படுத்தவும் அது வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்