செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இது சாத்தியமானது என்றும் சிங்கப்பூரால் இதைச் சாதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்கும் முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே வலுவான உறவு இருப்பதை திரு வோங் சுட்டினார். எனவே, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வேலைகளை மறுவடிவமைப்பது குறித்தும் ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிப்பது குறித்தும் சிங்கப்பூரால் கலந்துரையாட முடியும் என்று அவர் கூறினார்.
“இதைத்தான் சிங்கப்பூரில் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவை நோக்கி கண்மூடித்தனமாக விரைந்து செல்லக்கூடாது. செயற்கை நுண்ணறிவை தழுவ வேண்டும். அதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் தொழில்நுட்ப மாற்றம் ஊழியர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் வேண்டும். அவர்களை ஒதுக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிலை ஏற்படக்கூடாது. புதிய சூழலில் ஊழியர்கள் செழித்தோங்குவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.
குளோபல் சிட்டி சிங்கப்பூர்: எஸ்ஜி60 ஆண்ட் பியோன் மாநாட்டில் திரு வோங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார். மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். இந்த மாநாட்டை கொள்கை ஆய்வுக் கழகமும் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனமும் இணைந்து நடத்தின.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் ஜனதாஸ் தேவன் கலந்துரையாடலை வழிநடத்தினார். சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் மாநாடு நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு, வரிவிதிப்பு போன்ற தலைப்புகளை ஒட்டி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.
பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த பொதுத் தூதர் பேராசிரியர் டோமி கோ, தொழில்நுட்பம் அள்ளித் தரும் பலன்களையும் வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கத்தையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் தயாராக உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்போது சில வேலைகள் அறவே இல்லாமல் போய்விடுவதை அல்லது பரிணாம வளர்ச்சி அடைவதைப் பிரதமர் வோங் சுட்டினார். ஆனால் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது புதிய வேலைகள், குறிப்பாக கூடுதல் வருமானம் தரும் வேலைகள் உருவாகின்றன என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு மிகவும் வலிமைமிக்கது என்றும் மனிதர்கள் செய்யும் பலவற்றை அத்தொழில்நுட்பத்தால் செய்ய முடியும் என்றும் திரு வோங் கூறினார். இதுவே அக்கறைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு குறித்தும் வேலைகள் தொடர்பாக அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பொதுமக்கள் கவலைப்படுவது தமக்குத் தெரியும் என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவைக் கடைப்பிடிப்பதைத் தவிர சிங்கப்பூருக்கு வேறு வழி இல்லை என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பத்தால் ஏற்படும் பலன்களை அனுபவிக்க, அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆழ்ந்து யோசிக்க வேண்டும் என்றும் பிரதமர் வோங் தெரிவித்தார்.

