கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, பொங்கோலில் உள்ள டெக் லீ எல்ஆர்டி நிலையத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இலகு ரயில் சேவைகள் தொடங்கும்.
இந்த நிலையம் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் உள்ள வர்த்தகப் பூங்காவிற்கும் பொங்கோலில் உள்ள புதிய சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக (SIT) வளாகத்திற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், ஜூலை 31ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
முதல் மற்றும் கடைசி மைல் பயணங்களுக்கு எல்ஆர்டி நிலையம், வர்த்தகப் பூங்கா மற்றும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கூரையுடன் கூடிய இணைப்புப்பாதைகள் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
டெக் லீ நிலையம், 2005 முதல் படிப்படியாக திறக்கப்பட்ட பொங்கோல் எல்ஆர்டி தடத்தின் மேற்குப் பாதையில் உள்ள கடைசி நிறுத்தமாகும்.
2017ஆம் ஆண்டில் பொங்கோல் எல்ஆர்டி தடத்தின் மேற்கு வளைவுப் பாதையில் உள்ள சமுத்ரா நிலையம் சேவைக்காக திறக்கப்பட்டபோது, நிலப் போக்குவரத்து ஆணையம், டெக் லீ நிலையம் அதன் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும்போது மட்டுமே திறக்கப்படும் என்று கூறியது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படும் செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி சேவையில் 25 புதிய இரண்டு பெட்டிகளுடன் கூடிய இலகு ரயில்கள் ஈடுபடுத்தப்படும்.
இது 2024ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து படிப்படியாக, செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி சேவையில் இரண்டு வண்டியுடன் கூடிய இலகு ரயில்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது.
இது குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும். மேலும் நீண்டகால பொதுப் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதுடன் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆணையம் விவரித்தது.
தொடர்புடைய செய்திகள்
வடக்கு கிழக்குப் பாதையில் புதிய பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் திறக்கப்பட உள்ளது.
அது பொங்கோல் நார்த் நகரின் மையத்துடன் சிறப்பாக இணைக்கப்பட்டு, பயண நேரத்தை 15 நிமிடங்கள் வரை குறைக்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.
வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் அதன் முதல் தொகுதி மாணவர்களை வரவேற்கும்.
பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக பொங்கோல் வளாகத்தின் விரிவாக்கமாகக் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.