கட்டி முடிக்கப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகளான பின்னர் டெக் லீ இலகு ரயில் (எல்ஆர்டி) நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
சுற்றுப்புற மேம்பாட்டுப் பணிகளுக்கான அந்த நிலையம் காத்திருந்ததாக இதற்கு முன்னர் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறி இருந்தது.
பொங்கோல் வட்டாரத்தில் அமைந்து உள்ள அந்த நிலையம், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) விடியற்காலை 5 மணியளவில் தனது கதவுகளைத் திறந்தது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பொங்கோல் இலகு ரயில் பாதை கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டது. அந்தப் பாதையின் மேற்கு முகப்பில் அமைந்துள்ள கடைசி நிறுத்தம் டெக் லீ நிலையம்.
புதிய நிலையத்திற்கு பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனில் புதுச்சேரி வந்திருந்தார்.
“இந்த நிலையம் பொங்கோல் வட்டாரப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும்,” என்று கூறினார் தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஜனில்.
டெக் லீ நிலையத்தின் திறந்தவெளி நடைமேடை, பசுமைமிகு அம்சங்களால் சூழப்பட்டுள்ளது. மேலும், ‘சாஃப்ரா பொங்கோல்’ மற்றும் ‘ஒன் பொங்கோல்’ வாழ்க்கைபாணி நிலையத்தையும் அங்கிருந்து காணலாம்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்துக்கு அந்த நிலையத்தில் இருந்து இணைப்புப் பாதை மூலம் நான்கு நிமிடங்களில் நடந்து சென்றுவிடலாம்.
தொடர்புடைய செய்திகள்
காலை 8.30 மணியளவில் அந்தப் புதிய எல்ஆர்டி நிலையத்துக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்றபோது, அதுஅமைதியாகக் காணப்பட்டது. அப்போது அங்கு ஒருசில பயணிகளே இருந்தனர்.
அருகில் வசிப்போரும் வேலை செய்வோரும் வியப்புடன் அந்த நிலையத்தைப் பார்த்தனர். சிலர் அந்தப் புதிய நிலையத்தைக் காணொளியாகப் பதிவு செய்தனர்.
திருவாட்டி லீ என்பவர் பொங்கோல் நிலையத்தில் இருந்து புதிய டெக் லீ நிலையத்துக்கு இலகு ரயிலில் சென்றார். டெக் லீ நிலையத்தில் இருந்து தமது வேலை இடம் எவ்வளவு தூரம் என்பதை அறிய அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
பொங்கோல் குடியிருப்பாளரான யுவென் குவோக் வெங், 32, என்பவர் தமது ஐந்து வயது மகனுடன் டெக் லீ வந்தார். புதிய நிலையத்தைப் பார்க்க விரும்பியதால் மகனை அழைத்து வந்ததாக அவர் கூறினார்.
அண்மையில் பெங்கோலுக்குக் குடிபெயர்ந்த 72 வயது ஆல்பர்ட் சுங் என்பவர் டெக் லீ நிலையத்தைப் பார்த்த பின்னர், “சுற்றி நடப்பதற்கு அருமையான இடம்,” என்றார்.

