மோசடித் தடுப்பு முயற்சிகளுக்குப் பங்களித்த அமைப்புகளுக்கு அங்கீகாரம்

மோசடித் தடுப்பு முயற்சிகளுக்குப் பங்களித்த அமைப்புகளுக்கு அங்கீகாரம்

2 mins read
d553e6f9-43e0-4b35-b477-6f7247f08eec
தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் குற்றத் தடுப்பு விருது விழாவில் (இடமிருந்து) காவல்துறை ஆணையர் ஹோ குவாங் ஹுவீ, மன்றத்தின் தலைவர் ஜெரால்ட் சிங்கம், மூத்த அமைச்சர் கா.சண்முகம், உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் டான் சியே ஹீ, மன்றத்தின் துணைத் தலைவர் டான் புவே கெர்ன். - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2
Google News Preferred Icon

தேசிய குற்றத் தடுப்புச் மன்றத்தின் இரண்டாவது குற்றத் தடுப்பு விருது விழாவில் குற்றத் தடுப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பத்து அமைப்புகள் சிறப்பிக்கப்பட்டன. 

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“மோசடிக்காரர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதுப்புது வழிகளில் பொதுமக்களை குறிவைக்கிறார்கள். இதை எதிர்த்து தேசிய குற்றத் தடுப்பு மன்றத்துடன் சேர்ந்து அரசாங்கம் தொடர்ந்து செயல்படும்,” என்றார் அவர்.

பாதுகாப்பான, அதிக மீள்திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க, குற்றத் தடுப்பு மன்றத்துடன் அணுக்கமாகப் பணியாற்றி குற்றத் தடுப்பை வலுப்படுத்த கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளும் அமைப்புகள் அங்கீகரிக்கப்பட்டன. 

இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 10 அமைப்புகளில் யுஓபி வங்கி, கோ-அஹேட் சிங்கப்பூர், ஓசிபிசி வங்கி, சிங்கப்பூர் பூல்ஸ், மரினா பே சேண்ட்ஸ் ஆகிய ஐந்து அமைப்புகள் குற்றத் தடுப்புக்கான வெற்றியாளர் விருதைப் பெற்றன. 

குற்றங்களைத் தடுக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காக எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் ஷின் மின் சீன ஊடகமும் ‘பங்காளி’ விருதை பெற்ற அமைப்புகளில் அடங்கும்.

“சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். அணுக்கமான கண்காணிப்பு, விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தொழில்நுட்பம், சமூக நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் விருதுபெற்ற ஒவ்வோர் அமைப்பும் குற்றங்களைத் தடுக்கவும் தம்மைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவின,” என்றார் தேசிய குற்றத் தடுப்பு மன்றத் தலைவர் ஜெரால்ட் சிங்கம்.

காவல்துறையுடன் இணைந்து இணையக் காவல் (சைபர் காப்) எனப்படும் புதிய திட்டத்தை முன்னோட்டமாகத் தொடங்கவுள்ளதாக குற்றத் தடுப்பு மன்றம் அறிவித்தது. அதில் தற்போது ஏறக்குறைய 100 தொண்டூழியரகள் இணைந்துள்ளனர். தகுந்த பயிற்சிபெற்ற அவர்கள், ஆகஸ்ட் முதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளைக் கண்டறிவதன் மூலம் இணையவழியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் தீவிரப் பங்கு வகிக்கிறது இணையக் காவல் திட்டம். தொண்டூழியர்கள் பகிரும் தகவல்கள், காவல்துறை விரைந்து தலையிட்டு பல மோசடிகளைத் தடுக்க உதவும்,” என்று திரு ஜெரால்ட் கூறினார்.

யுஓபி தோ பாயோ பிரிவு மேலாளர் திரிசியா டான், தனது பிரிவில் மோசடிகளைக் கண்டறிந்து தடுத்த முயற்சியின் மூலம் யுஓபி வெற்றியாளர் விருதை வெல்ல உதவினார்.

சென்ற ஆண்டு முதியவர் ஒருவர் தம் கணக்கிலிருந்து பெருந்தொகையைக் கோருவற்கான காரணம் குறித்து திருவாட்டி டானுக்குச் சந்தேகம் எழவே, அவர் சரியான நேரத்தில் தலையிட்டார்.

“முதலீட்டு மோசடிகள், காதல் மோசடிகள் இக்காலத்தில் மிகவும் பொதுவான மோசடி வகைகளாக உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

“2026 ஜனவரி முதல் ஜூலை வரை, 350க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய மோசடிகளைக் கண்டறிந்த ஓசிபிசி, மோசடித் தடுப்பு ஆணையத்திற்குத் தெரியப்படுத்தியது. இவ்வித மோசடிகளைத் தடுக்க நாங்கள் காவல்துறையுடன் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றார் ஓசிபிசி மோசடித் தடுப்புப் பிரிவின் தலைவர் பீவர் சுவா.

குறிப்புச் சொற்கள்
குற்றம்விருதுவிழிப்புணர்வு