ஒரே நாளில் இரண்டு மூதாட்டிகள் உட்பட மூன்று பெண்களை மானபங்கம் செய்ததாக செவ்வாய்க்கிழமை அன்று 17 வயது கமல்ஹான் கவ்னோ சுப்ரமணியம் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த கமல்ஹான் மீது மானபங்கம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இம்மாதம் 16ஆம் தேதியன்று வாம்போ வட்டார புளோக் ஒன்றின் எட்டாவது மாடியில் இருந்த 79 வயது மூதாட்டியை கமல்ஹான் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. சற்று நேரம் கழித்து பெண்டர்மியர் வட்டார புளோக் ஒன்றின் மின்தூக்கிக்குள் சென்ற கமல்ஹான், அங்கு 49 வயது மாது ஒருவரை மானபங்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, அதே வட்டாரத்தில் உள்ள இன்னொரு புளோக்கின் ஏழாவது மாடி மின்தூக்கி இடமருகே கமல்ஹான் ஓர் 73 வயது மூதாட்டியை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.
கமல்ஹானின் வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கமல்ஹான் மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஈராண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.