தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின் சிகரெட் விவகாரம்: தாக்கப்பட்டதாகக் கூறும் பதின்மவயது மாணவி

2 mins read
fbaa900c-32de-4a8c-a123-e8061fd8de71
மாணவிக்கு மூக்கிலிருந்து ரத்தக் கசிவும் கால்களில் காயங்களும் ஏற்பட்டதோடு, அவரது உதடுகளும் வீங்கின. - படம்: ஷின் மின்

இரண்டு மாணவர்கள் தாக்கியதால் உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு மாணவர்கள் தங்கள் நண்பர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் மின் சிகரெட் பயன்படுத்தியதைக் காட்டும் காணொளியை அந்த 15 வயது மாணவி பகிர்ந்துகொண்டதாகக் குறைகூறினர்.

ஆசிரியர் தினத்திற்கு முந்திய நாள், ஆகஸ்ட் 29ஆம் தேதி மாணவர்கள் முன்கூட்டியே பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அந்தச் சம்பவம் நடந்தது.

தமது நண்பருடன் வீட்டிற்கு நடந்துசென்றுகொண்டிருந்தபோது அருகில் உள்ள புளோக்கின் கீழ்த்தளத்திற்குச் செல்லுமாறு மற்றொரு மாணவர் தங்களைக் கேட்டுக்கொண்டதாக அந்த மாணவி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

அங்குச் சென்றபோது, சில மாணவர்கள் அவர்களுக்குக் காத்திருந்ததாக அவர் சொன்னார்.

தமது கைப்பேசியைக் காட்டுமாறு அவர்கள் வற்புறுத்தியதாகவும், கொடுக்க மறுத்தபோது அதனை வலுக்கட்டாயமாக அவர்கள் எடுத்துக்கொண்டதாகவும் அந்த மாணவி கூறினார்.

அதன் பிறகு, கிட்டத்தட்ட பத்து மாணவர்கள் அந்த மாணவியையும் அவரது நண்பரையும் பலமாடி கார் நிறுத்துமிடம் ஒன்றுக்கு இழுத்துச் சென்றனர். ஒரு மாணவி அவரைப் பலமுறை அறைந்தார் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு குழுவாகக் கூடியிருந்த அந்த மாணவர்கள் அவரது நண்பரிடம் அவ்விடத்தைவிட்டு வெளியேறுமாறு கூறினர்.

பின்னர், தம்மை அறைந்த மாணவி தமது முகத்திலிருந்து கண்ணாடி பறக்கும்வரை தொடர்ந்து அவ்வாறு செய்ததாக அந்த 15 வயது மாணவி கூறினார்.

அதுமட்டுமன்றி, அந்த மாணவி தமது மூக்கு, உதடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குத்தியதாகவும் அவர் சொன்னார்.

இதன் தொடர்பில் புகார் செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் பள்ளி கூறியது. காவல்துறை விசாரணையில் உதவிவருவதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்