உயர்நிலைப் பள்ளியில் சக மாணவர்களாக இருந்த 14 வயது சிறுவன், 15 வயது மாணவி இருவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் பாலியல் உறவில் இருந்ததால் சிறுமி கருவுற்றார். இதை அவர்களின் பெற்றோரிடமிருந்து மறைத்திட இருவரும் கருவை அழிக்கத் திட்டமிட்டனர்.
இருவரும் இணையத்தில் காணொளியைப் பார்த்துவிட்டு, உடையை மாட்டி வைக்கும் ‘ஹேங்கர்’ கொண்டு உடலுக்குள் செலுத்திக் கருவை வெளியேற்ற முயன்றனர்.
சிறுமி கருத்தடை மாத்திரைகளையும் உட்கொண்டார்.
பிறகு, சிறுவன் சிறுமியின் வயிற்றில் பலமாகக் குத்தியும் முழங்கால்களால் தாக்கியும் கருவை அழிக்க முயன்றதாகக் கூறப்பட்டது.
சிறுமிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.
பிறகு, அவர் வீட்டின் அலமாரியில் அதனை மறைத்து வைத்தார்.
சிறுவனின் தூண்டுதலால் சிறுமி அவளது வீட்டின் தோட்டத்தில் குழந்தையைப் புதைத்துவிட்டார்.
ஒரு தலைசிறந்த பள்ளியில் மாணவராக இருக்கும் அந்தச் சிறுவன், குற்றம் புரிந்துள்ளது டிசம்பர் 13ஆம் தேதியன்று நிரூபணமானது.
வயது குறைந்தவரைப் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியது , சிறுமியுடன் சேர்ந்து குழந்தை பிறந்ததை மறைத்துப் புதைத்தது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு, அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம் இழைத்தபோது சிறுவன் வயது குறைந்தவராக இருந்ததால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
சீர்திருத்தப் பயிற்சிக்கு அவர் ஏற்றவர்தானா என்பது குறித்த அறிக்கை கோரி உத்தரவிடாமல், குற்றவாளி பற்றிய நன்னடத்தைக் கண்காணிப்பு அறிக்கை வேண்டும் என மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ கோரியுள்ளார்.

