பதின்ம வயதினரிடையே குழந்தைப் பிறப்பு 20 ஆண்டுகளில் ஆகக் குறைவு

பதின்ம வயதினரிடையே குழந்தைப் பிறப்பு 20 ஆண்டுகளில் ஆகக் குறைவு

2 mins read
e4f634ff-6466-4ae7-8814-4c119ab67cad
கர்ப்பமடையும் இளம் தாய்மாருக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்வது தொடர்ந்து முக்கியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.  - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

சிங்கப்பூரில் பதின்ம வயதினர் குழந்தை பெறும் எண்ணிக்கை 20 ஆண்டுகள் காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 140 பதின்ம வயதினர், குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 விழுக்காட்டுக்கும் மேல் குறைவு. அப்போது இந்த எண்ணிக்கை 244ஆக இருந்தது.

சிங்கப்பூரில் பிறப்புகள், இறப்புகள் குறித்துக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்ற ஆண்டு குழந்தை பெற்ற பதின்ம வயதினரில் திருவாட்டி ஜேனிஸ் லிம்மும் ஒருவர்.

திருவாட்டி லிம் 19வது வயதில் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, இவ்வளவு சிறிய வயதிலேயே அவர் தாயான முடிவை உறவினர்கள் சிலர் விரும்பவில்லை.

அவர் மகப்பேற்றுக்குப் பிந்திய மன அழுத்தத்தால் அவதியுற்றார். அவரின் கணவர் மாணவராக இருந்ததால், திருவாட்டி லிம்முக்குத் தேவையான ஆதரவை வழங்க அவரால் இயலவில்லை.

இருப்பினும், அவரின் தாயார் திருவாட்டி லிம்முக்கு உறுதுணையாக இருந்தார். திருவாட்டி லிம் நிலையான வேலையில் தொடர முடியாமல் சிரமப்பட்டபோது, குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் சில செலவுகளை ஏற்கவும் அவரின் தாயார் முன்வந்தார்.

திருவாட்டி லிம், 21 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொண்டதால் கட்டாயத் திருமண ஆயத்தப் பயிற்சியில் பங்கேற்க வேண்டியிருந்தது.

அந்தப் பயிற்சியின் மூலம், அவர் ‘ஃபே யூ சமூகச் சேவைகள்’ அமைப்பைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ஒருவரைச் சந்தித்தார். தான் எதிர்கொண்ட சிரமங்களைப் பற்றிப் பேசுவதற்குத் திருவாட்டி லிம்மிற்கு அவர் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்.

தாயாரிடமிருந்தும் ஆலோசகரிடமிருந்தும் கிடைத்த ஆதரவு, தாய்மைக்கான இந்த மாற்றத்தை அதிகத் தனிமை உணர்வு இல்லாமல் கடக்க உதவியதாக அவர் கூறினார்.

பதின்ம வயதினர் பிள்ளை பெற்றுக்கொள்ளும் விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து சிஎன்ஏ ஊடகம் சுகாதார அமைச்சிடம் கேட்டிருந்தது.

பதின்ம வயதினர் குழந்தை பெற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் அரிதாகவே இருப்பதாலும் சென்ற ஆண்டின் புள்ளிவிவரம் ஒரே ஓர் ஆண்டின் தரவைக் குறிப்பதாலும் இந்தக் குறைந்த எண்ணிக்கை சரிவுப் போக்கைக் காட்டுகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என அமைச்சு கூறியது.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பதின்ம வயதினரிடையே கருக்கலைப்பு விகிதம் பெரிய மாற்றமின்றி 1,000 பதின்ம வயதுப் பெண்களுக்குக் கிட்டத்தட்ட இருவர் என்ற அளவிலேயே உள்ளது என அமைச்சு தெரிவித்தது.

பதின்ம வயதுக் கர்ப்பங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட முடியாத அக்கறைக்குரிய விவகாரமாக இருந்தாலும் கர்ப்பமடையும் இளம் தாய்மாருக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்வது தொடர்ந்து முக்கியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்