காவல்துறை அதிகாரி ஒருவரை நவம்பர் 21ஆம் தேதி தள்ளிவிட்டுக் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயதுப் பதின்ம வயதினர்மீது திங்கட்கிழமை (நவம்பர் 23) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி இரவு 11.50 மணி அளவில் புளோக் 611, பிடோக் ரிசர்வாயர் சாலைக்கு அருகே பதின்ம வயதினர் ஒருவர் தொல்லை கொடுப்பதாய்த் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை நவம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சம்பவ இடத்தைச் சென்றடைந்த காவல்துறை அதிகாரிகள் அந்தப் பதின்ம வயதினரைத் தடுத்துநிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
அதிகாரி ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தியபோது, அந்தப் பதின்ம வயதினர் அதிகாரியைத் தள்ளிவிட்டு அவரது முகத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
அந்த அதிகாரியின் வலது கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
அரசாங்க ஊழியர் ஒருவர் தமது கடமையைச் செய்வதைத் தடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்திற்காக அந்தப் பதின்ம வயதினர்மீது நவம்பர் 23ஆம் தேதி குற்றம் சாட்டப்படவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.
