வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு வகையான மின்சிகரெட்டுகளைக் காட்டும் விளம்பரம் ஒன்றைப் பதிவேற்றியதாக நம்பப்படும் பதின்ம வயது பெண்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜூரோங் வெஸ்ட் கழக வீட்டில் ஏழு மின்சிகரெட்டுகளை வைத்திருந்தது, மூன்று பயன்படுத்தியபின் தூக்கி வீசும் மூன்று மின்சிகரெட் கருவிகளை விற்றது ஆகிய குற்றச்சாட்டுகளும் 19 வயது அல்பீ சாய் புவோ யின்மீது சுமத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் அந்தச் சிங்கப்பூர்ப் பெண் ஆகஸ்ட் 19ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சிகரெட்டுகளை வைத்திருந்தாலோ, பயன்படுத்தினாலோ, வாங்கினாலோ, அதிகபட்சமாக $2,000 அபராதம் விதிக்கப்படக்கூடும்.
மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்தாலோ, இறக்குமதி செய்தாலோ, அவற்றையும் அவற்றின் பாகங்களையும் விற்றாலோ ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையுடன் $10,000 வரையிலான அபராதம் விதிக்கப்படக்கூடும்.
இடொமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளை வைத்திருந்தாலோ பயன்படுத்தினாலோ ஈராண்டு வரை சிறைத் தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்படக்கூடும்.
மின்சிகரெட் புழக்கத்தைக் கைவிட விரும்புவோர் 1800-438-2000 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ‘ஐ குவிட்’ (I Quit) திட்டத்தில் இணையலாம்.
திட்டத்தில் இணைவோர் தங்கள்மீது குற்றஞ்சாட்டப்படும் என அஞ்சத் தேவையில்லை. அத்தகையோர் மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதாகவோ பயன்படுத்துவதாகவோ கருதப்படமாட்டார்கள்.