இலகு இரயில் நிலையத்தில் கண்டெடுத்த ரொக்க அட்டையைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கிய குற்றத்திற்காக17 வயது இளையருக்கு, வியாழக்கிழமை, 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.
இளையர் தன் நண்பருடன் இணைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.
இருவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் சிறார், இளையர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், அவர்களின் பெயர்களை வெளியிட இயலாது.
இளையர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
தண்டனை வழங்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி, கடலூர் இலகு ரயில் நிலையத்தில் டிபிஎஸ் வங்கியின் ரொக்கக் கழிவு அட்டை ஒன்றைக் கண்ட இளையர் அதைப் பயன்படுத்தி தனது ஈஸி-லிங்க் அட்டைக்கு $70 நிரப்பியதாகக் கூறப்பட்டது.
பின்னர் தன் 16 வயது நண்பருடன் இணைந்து S$459 மதிப்புள்ள ஆப்பிள் கைக்கடிகாரம், S$159 மதிப்புள்ள நகை, S$179 மதிப்புள்ள ஆடைகள், உணவு, பானங்கள் போன்றவற்றை அவர் வாங்கினார்.
பாதிக்கப்பட்டவரின் அட்டையை 18 முறை பயன்படுத்தி, அவர்கள் கிட்டத்தட்ட S$1200ஐச் செலவுசெய்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே நன்னடத்தைக் கண்காணிப்பில் இருந்த வேளையில் இளையர் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தான் செலவுசெய்த முழுப் பணத்தையும் பாதிக்கப்பட்டவரிடம் கடந்த ஜூலை மாதம் திரும்பத் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ள அவர்,100 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

