வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்திலிருந்து தமது புகைப்படக் கருவியை எடுக்கச் சென்ற ஆடவர் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த, திரு வோங் வெய் லூங் என்ற அந்த ஆடவரின் காரைக் காணவில்லை.
செங்காங் வெஸ்ட் ரோடு, புளோக் 457ன் பலவாகன கார் நிறுத்தும் இடத்தில், அந்தச் சம்பவம் அக்டோபர் 29ஆம் தேதி இரவு 11.30 மணிவாக்கில் நடந்தது.
கார் உண்மையிலேயே காணாமல்போனதை அறிந்த அவர், உடனடியாகக் காவல்துறையை அழைத்தார்.
காரின் சாவியில் கோளாறு இருந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் காரைப் பூட்டாமலேயே சாவியை காரின் உள்ளேயே விட்டுவிடுவதாகக் கூறினார்.
காவல்துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தமது காரின் எந்திரச் சத்தத்தை திரு வோங் கேட்டார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் தளத்திற்கு வந்த காரை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தினர். அதில் 14 முதல் 16 வயது வரையிலான ஐந்து சிறுவர்களும் 13 வயது சிறுமியும் இருந்தனர்.
அவர்கள் காரை திருடியதற்காகக் கைதுசெய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
காரிலிருந்து மின்சிகரெட், ‘நக்கல் டஸ்டர்’ உள்ளிட்ட பொருள்கள் இருந்தன. காரில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தாம் பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டதாக திரு வோங் கூறினார்.

