தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

7 புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் நிலையங்கள் ஜூன் 23ல் திறக்கப்படும்

2 mins read
5d2e7902-99e7-4b7e-9305-80cfdf727ec3
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 4ஆம் கட்டத்தில் உள்ள ஏழு நிலையங்களில் ‘காத்தோங் பார்க்’கும் ஒன்று. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

தஞ்சோங் ரூ நிலையத்திலிருந்து பேஷோர் நிலையம் வரை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 4ஆம் கட்டம், பயணிகள் சேவைக்காக ஜூன் 23ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் தங்கியிருப்போருக்கும் அங்குச் செல்வோருக்கும் மேலும் வசதியாக இச்சேவை இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் மார்ச் 5ஆம் தேதி கூறினார்.

தஞ்சோங் ரூ, காத்தோங் பார்க், தஞ்சோங் காத்தோங், மரின் பரேட், மரின் டெரஸ், சிக்லாப், பேஷோர் ஆகிய ஏழு ரயில் நிலையங்கள், 10.8 கிலோமீட்டர் நீளமான தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் அமைந்துள்ளன.

அவை உட்லண்டஸ் நார்த் ரயில் நிலையத்திலிருந்து, கரையோரப் பூந்தோட்டங்கள் நிலையம் வரை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் முதல் மூன்று கட்டங்களுடன் இணைக்கப்படும்.

ஜூன் 21ஆம் தேதி முன்னோட்ட நாளின் ஒரு பகுதியாக பயணிகள் அவற்றில் இலவசமாகச் செல்லலாம்.

போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது திரு சீ அதனைத் தெரிவித்தார்.

முன்னோட்ட நாளன்று காலை பத்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பயணிகள் ரயில் நிலையங்களில் இலவசமாகச் செல்லலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 4ஆம் கட்டம் திறக்கப்பட்டதும், ஏறக்குறைய 235,000 குடும்பங்களுக்கு அந்தப் பாதையில் உள்ள ஒரு ரயில் நிலையம் பத்து நிமிட நடை தொலைவில் அமைந்திருக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.

அந்த ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் 50 விழுக்காட்டுப் பயண நேரம்வரை சேமிக்கலாம் என்றும் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்