சிங்கப்பூரின் தொலைமருத்துவ முறையின் தரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
“தொலைமருத்துவத்துக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு விதிமுறைகளால் குற்றங்களை ஒழித்துவிட இயலாது. அதற்கு வாய்ப்பில்லை.
“மாறாக, நடைமுறைகள் தவறான பாதையில் செல்லும்போது, குறிப்பாக, புதிய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகப் போக்குகள் காரணமாக தவறு நிகழும் வேளையில் அவற்றை உடனடியாகச் சரிசெய்ய முடியும் என்பதை அந்த விதிமுறைகள் உறுதிசெய்யும்,” என்று திரு ஓங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொலைமருத்துவச் சேவை வழங்கும் நிறுவனங்கள் நோயாளி பராமரிப்பின் தரநிலைகளுக்கு ஏற்றவாறு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை ஏதும் நடப்பில் உள்ளதா என சுகாதார அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் வான் ரைஸாலும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி யனி சோவும் அந்தக் கேள்விகளைச் சமர்ப்பித்து இருந்தனர்.
தொலைமருத்துவச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான MaNaDr (மானாடாக்டர்) மருந்தகத்தின் நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் ஒழுங்குமுறை கட்டமைப்புக்கான அவசியம் உள்ளதா என்றும் அவர்கள் கேட்டிருந்தனர்.
அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஓங், “தொலைமருத்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் சுகாதாரப் பராமரிப்புச் சேவைச் சட்டத்தின்கீழ் (HCSA) உரிமம் பெற்றிருப்பதோடு உரிய தரநிலைகளை அவை கடைப்பிடிக்க வேண்டும்,” என்றார்.
MaNaDr மருந்தகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தொலைமருத்துவ ஆலோசனைகளை ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே வழங்கியதும் குறுகிய காலத்திற்குள் ஏராளமான மருத்துவச் சான்றிதழ்களை (MCs) வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மருந்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.