தெலுக் பிளாங்கா ஹைட்சில் 73 வயது முதியவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 32 வயது ஆடவர் மீது புதன்கிழமை (அக்டோபர் 7) கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
கேப்ரியல் ஃபூங் ஷி செங் எனப்படும் அந்த ஆடவர், மத்திய காவல்துறை பிரிவிலிருந்து காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 57ன் கீழ்த்தளத்தில் முதியவரான தாம் நாம் போ என்பவரைக் கொன்றதாக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
திங்கட்கிழமை (அக்டோபர் 5) மாலை 6 மணியளவில் தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 61க்கு அருகிலிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக இதற்கு முன்னர் காவல்துறை கூறியிருந்தது.
புளோக்கின் கீழ்த்தளத்தில், முதியவரான தாம் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் காவல்துறையினர் கண்டனர்.
அருகிலேயே அடையாளம் குறிப்பிடப்படாத 53 வயது ஆடவரும் காயமடைந்த நிலையில் காணப்பட்டார்.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தாம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் காவல்துறையைத் தொடர்புகொண்ட ஃபூங் சரணவடைவதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
‘இன்விக்டஸ் லா கார்ப்பரேஷன்’ நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ஜோசபஸ் டான், கோரி வோங், டெவ்லின் மோஹ்யோங் ஆகியோர் ஃபூங் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
மனநல மருத்துவக் கழகத்தின் மதிப்பீட்டிற்காக ஃபூங்கை சாங்கிச் சிறை வளாக மருத்துவ நிலையத்தில் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது வழக்கு அக்டோபர் 28ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
கொலைக் குற்றம் புரிந்தோர் மரண தண்டனையை எதிர்நோக்குவர்.
சம்பவத்தன்று இரவு மணி 10.50க்குச் சம்பவ இடத்திற்குச் சென்றபோது தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 57ன் கீழ்த்தளம் புளோக் 61ல் உள்ள காப்பிக் கடை, அந்த இரு புளோக்குகளுக்கும் இடைப்பட்ட கார்நிறுத்தம் உள்ளிட்ட பகுதியில் காவல்துறையின் விசாரணைக்காகத் தடுப்புகள் போடப்பட்டிருந்ததைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் காணப்பட்டதாகவும் சாலையிலும் கீழ்த்தளத்திலும் ரத்தக்கறை இருந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மாலை 6 மணியளவில், உடல் முழுவதும் ரத்தம் படிந்த நிலையில் ஒருவர் காப்பிக் கடையை நோக்கி ஓடிவருவதைக் கண்டதாக காப்பிக் கடையில் பணிபுரியும் 27 வயது ரவிந்தர் கூறினார்.
மூச்சு இரைப்பதுபோல் காணப்பட்ட அந்த ஆடவர், யாரோ ஒருவர் தம்மைத் துரத்திவருவதைச் சைகை மூலம் சுட்டிக்காட்டினார். இருப்பினும் அப்படி யாரும் துரத்தியதைத் தாம் காணவில்லை என்றார் ரவிந்தர். அந்த வழியாகச் சென்ற ஒருவர் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையை அழைத்தார்.
பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு கடை ஊழியர், காயமடைந்த ஆடவர் ஒருவர் காப்பிக் கடை அருகில் உள்ள மருந்தகத்தை நோக்கி ஓடியதாகக் கூறினார்.
இந்நிலையில், ரத்தக்காயங்களுடன் இருந்த ஒருவர் தம்மிடம் மருத்துவ உதவி கேட்டு வந்ததாக காப்பிக் கடை அருகில் இருந்த மருந்தகத்தின் மருத்துவர் கூறினார்.
மாலை 6 மணியளவில் இருவரின் உதவியுடன் வந்த அவர், தாம் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறினார் என்று மருத்துவர் ஜோயல் லீ செவ்வாய்க்கிழமை (அக்டேபார் 6) ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இடது தோள்பட்டையில் காயமடைந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த அந்த 53 வயது ஆடவர், தமக்குச் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக வேறொருவருக்கு உதவுமாறு மருத்துவர் லீயிடம் கேட்டுக்கொண்டார்.
காரணம், 73 வயது முதியவர் ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டு, அருகிலுள்ள காப்பி கடையில் மிக மோசமான நிலையில் இருப்பதாக அந்த ஆடவர் கூறினார்.
