தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் மரணம்: ஆடவர் மீது நாளை கொலைக் குற்றச்சாட்டு

தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் மரணம்: ஆடவர் மீது நாளை கொலைக் குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Oct 2026 - 9:35 am

2 mins read

தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் பகுதியில் 73 வயது முதியவரைக் கொலை செய்ததாக 32 வயது ஆடவர் மீது புதன்கிழமை (அக்டோபர் 7) குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தச் சம்பவம் குறித்து திங்கட்கிழமை (அக்டோபர் 5) மாலை 6 மணியளவில் தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 61 அருகிலிருந்து உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

சம்பவ இடத்தில் 73 வயது ஆடவர் அசைவற்றுக் கிடந்ததையும் 53 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்த நிலையில் தரையில் கிடந்ததையும் கண்டதாகக் காவல்துறை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவ்விருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அங்கு 73 வயது ஆடவர் உயிரிழந்தவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் காவல்துறையை அழைத்த 32 வயது ஆடவர் தாம் சரணடைவதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த ஆடவர் தனித்துச் செயல்பட்டதாக தான் நம்புவதாகக் காவல்துறை கூறியது. சமயம் தொடர்பானதாகவோ பயங்கரவாதம் தொடர்பானதாகவோ அந்தச் சம்பவம் இருப்பதற்கான சான்று எதுவும் இல்லை என்றும் அதன் அறிக்கை தெரிவித்தது.

இரவு 10.50 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 57ன் கீழ்த்தளமும் புளோக் 61ல் உள்ள காப்பிக்கடையும் அந்த இரு புளோக்குகளுக்கும் இடைப்பட்ட கார்நிறுத்தப் பகுதியும் காவல்துறையின் விசாரணைக்காக மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் காணப்பட்டதாகவும் சாலையிலும் கீழ்த்தளத்திலும் ரத்தக்கறை இருந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மாலை 6 மணியளவில், உடல் முழுவதும் ரத்தம் படிந்த நிலையில் ஒருவர் காப்பி கடையை நோக்கி ஓடி வருவதைக் கண்டதாக காப்பிக் கடையில் பணிபுரியும் 27 வயதான ரவிந்தர் என்பவர் கூறினார்.

மூச்சு இரைப்பதுபோல் காணப்பட்ட அந்த ஆடவர், யாரோ ஒருவர் தம்மைத் துரத்தி வருவதைச் சைகை மூலம் சுட்டிக்காட்டினார். இருப்பினும் அப்படி யாரும் துரத்தியதைத் தாம் காணவில்லை என்றார் ரவிந்தர். அந்த வழியாகச் சென்ற ஒருவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை அழைத்தார்.

பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு கடை ஊழியர், காயமடைந்த ஆடவர் ஒருவர் காப்பிக் கடை அருகில் உள்ள மருந்தகத்தை நோக்கி ஓடியதாகக் கூறினார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
மரணம்கொலைகுற்றச்சாட்டு