தெலுக் பிளாங்கா சாலை விபத்து: ஆடவர்மீது ஏழு குற்றச்சாட்டுகள்

1 mins read
22d2d962-4fa9-4fc2-a5e9-eb75d92c1fef
தெலுக் பிளாங்கா ஹில் பகுதியில் காரை நிறுத்திவிட்டுத் தலைமறைவானார் கென்னத். அவர் 5ஆம் தேதி, காக்கி புக்கிட் பகுதியில் கைது செய்யப்பட்டார். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெலுக் பிளாங்கா வட்டாரத்தில் நான்கு வாகனங்கள்மீது மோதிவிட்டுத் தப்பியோடிய ஆடவர்மீது வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கென்னத் காங் கெங் குவான் என்ற 34 வயது ஆடவர்மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வாகனம் ஓட்டத் தடை விதித்திருந்தபோதும் வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியது, விபத்துக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தாமல் சென்றது, காவல்துறைக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்காதது, விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு ஓடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கென்னத்மீது பதிவு செய்யப்பட்டன.

இச்சம்பவம் நவம்பர் 4ஆம் தேதி காலை 8.30 மணிவாக்கில் தெலுக் பிளாங்கா டிரைவில் நிகழ்ந்தது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிக் காரை ஓட்டி இரண்டு கார்கள், ஒரு வேன், ஒரு பேருந்து ஆகியவற்றின் மீது கென்னத் மோதினார்.

கென்னத் மோதிய ஒரு காரில் இருந்த 48 வயது ஆடவருக்குக் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தெலுக் பிளாங்கா ஹில் பகுதியில் காரை நிறுத்திவிட்டுத் தலைமறைவானார் கென்னத். அந்தக் காரில் மின்சிகரெட்டு இருந்தது.

நவம்பர் 5ஆம் தேதி, காக்கி புக்கிட் பகுதியில் உள்ள தொழிற்பேட்டைக் கட்டடம் அருகே கென்னத் கைது செய்யப்பட்டார்.

கென்னத் மீதான விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகார்கைது