தெமாசெக், ஜிஐசி எதிர்பார்த்தபடி செயல்படுகின்றன: ஜெஃப்ரி சியாவ்

2 mins read
f95d401f-6d45-451f-8441-d36bd380029c
தெமாசெக், ஜிஐசி ஈட்டிய வருவாய் நியாயமான அளவில் இருந்தது என்று அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்புகளான தெமாசெக், ஜிஐசி ஆகிய இரண்டும் எதிர்பார்த்தபடி செயல்பட்டுள்ளதை அரசாங்கத்தின் மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளதாக நிதிக்கான மூத்த துணை அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் திங்கட்கிழமை (ஜனவரி 12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவை இரண்டும் ஈட்டிய வருவாய் நியாயமானதாகவும் இருந்ததாக அவர் சொன்னார். நாடாளுமன்றத்தில் தெமாசெக், ஜிஐசி செயல்பாடு குறித்து ஏழு எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஊடகங்கள், ஜிஐசியையும் தெமாசெக்கையும் மற்ற முதலீட்டு நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அண்மைய ஆண்டுகளாக அவை சிறப்பாகச் செயல்படவில்லை என்பது போல அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. 2025ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட ஃபினான்ஷியல் டைம்ஸ் கட்டுரையில் இரண்டு முதலீட்டு நிறுவனங்களின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. உலக முதலீட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அண்மைய ஆண்டுகளாக அவை ஈட்டிய வருவாய் அவ்வளவு சாதகமாக இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. குளோபல் எஸ்டபிள்யூஎஃப் தரவுகளின்படி சிங்கப்பூரின் இரு முதலீட்டு அமைப்புகளும், கடந்த பத்து ஆண்டுகளில் இதே போன்ற உலகளாவிய 50 நிறுவனங்களிலேயே பலவீனமாகச் செயல்பட்டதாகவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தகைய ஒப்பீடுகள் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திரு ஜெஃப்ரி சியாவ் சொன்னார். வெவ்வேறு நிதிகள், வெவ்வேறு ஆபத்தான சூழ்நிலைகளின்கீழ் செயல்படுகின்றன என்று கூறிய அவர், நீண்டகால முதலீடே எங்களுடைய நோக்கம் என்றார். குறுகியகால அல்லது ஏற்ற இறக்கமான ஆண்டுக்கு ஆண்டு முதலீடுகளில் கவனம் செலுத்தப்படுவதில்லை என்று போக்குவரத்து அமைச்சருமான திரு சியாவ் மேலும் தெரிவித்தார். ஜிஐசி, அரசாங்கத்தின் நிதி நிர்வாக அமைப்பாகும். அதன் நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பை பாதுகாத்து மேம்படுத்துவதே முக்கியப் பணியாகும். அதன் நிதி, 2025 ஆண்டு மார்ச் 31 வரையிலான இருபது ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.8 விழுக்காடு வருவாயைப் பதிவு செய்துள்ளது. தெமாசெக் கீழ்மட்டத்திலிருந்து முதலீடுகளை செய்கிறது. நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட நிறுவனங்களிலும் சந்தைகளிலும் அது நேரடியாக முதலீடு செய்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் தெமாசெக் நிறுவனம், அமெரிக்க டாலர் மதிப்பில் ஆண்டுக்கு எட்டு விழுக்காடு மொத்த பங்குதாரர் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் “உலகளாவிய பொருளியல், முதலீட்டு மாற்றங்களுக்கு ஏற்ப ஜிஐசி, தெமாசெக் செயல்பாடுகளைத் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்வோம்,” என்று திரு ஜெஃப்ரி சியாவ் உறுதி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்