இந்தியாவில் கவனம் செலுத்துகிறது தெமாசெக்

தெமாசெக் தலைவர் என்ற பொறுப்பில் முதல் முறையாக நேர்காணல்

இந்தியாவில் கவனம் செலுத்துகிறது தெமாசெக்

3 mins read
இந்தியாவின் உள்நாட்டுத் தேவையை முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்கிறது தெமாசெக்
87808c49-7eb1-41d0-9ed2-02c971f16317
தெமாசெக் தலைவர் என்ற பொறுப்பில் முதல் முறையாக ஜூன் 2ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். - படம்: தெமாசெக்

புவிசார் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய சந்தை நிலையற்றதாக இருக்கும் வேளையிலும் சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கிற்கு இந்தியா ஒரு முக்கியமான வளர்ச்சி இயந்திரம் என்று முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.

2025 அக்டோபரில் தெமாசெக் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பை நிறுவனத்தின் நீண்டகால முதலீட்டுக்கான முக்கியத் தூணாக அவர் குறிப்பிட்டார்.

“இந்தியா எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தை” என்று கூறிய திரு டியோ, கடந்த ஆண்டு இறுதியில் இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பொருளியல் உறவுகளை மேம்படுத்துவது குறித்துப் பேசினார்.

குறிப்பாகச் சுகாதாரம், தளவாடங்கள், போக்குவரத்து ஆகிய துறைகளில் தெமாசெக் “சிறந்த முதலீடுகளைக்” கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மருத்துவத் தேவைக்கான சுகாதார நிறுவனமொன்றில் தெமாசெக் முதலீடு செய்துள்ளதாகவும், அந்த நிறுவனம் விரைவில் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) வரவுள்ளதாகவும் திரு டியோ கூறினார்.

மேலும் மும்பைத் துறைமுகம், விமானப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆகியவற்றில் தெமாசெக் குழும நிறுவனங்கள் பெரிய முதலீடுகளைச் செய்து வருகின்றன.

2024-25ஆம் நிதியாண்டில் சிங்கப்பூர் $14.94 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கி இந்தியாவின் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாக இருந்தது. 2000ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் சிங்கப்பூர் 24 விழுக்காட்டுப் பங்கைக் (US$174.88 பில்லியன்) கொண்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பைத் தெமாசெக் நிறுவனத்தின் நீண்டகால முதலீட்டுக்கான முக்கியத் தூணாகத் திரு டியோ குறிப்பிட்டார்.
இந்தியாவின் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பைத் தெமாசெக் நிறுவனத்தின் நீண்டகால முதலீட்டுக்கான முக்கியத் தூணாகத் திரு டியோ குறிப்பிட்டார். - படம்: தெமாசெக்

நிதித்துறையை வடிவமைக்கும் தேசியப் பாதுகாப்பு

இன்றைய முதலீடு வெறும் எண்களைப் பகுப்பாய்வு செய்வது மட்டுமன்று என்றார் பாதுகாப்புத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவரான திரு டியோ.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் நடக்கும் போர்களும் உலகளாவிய பணவீக்கமும் எரிபொருள் விலையையும் விநியோகத்தையும் பாதித்துள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உலகப் பொருளியல் மன்றக் கூட்டத்தில் பங்கேற்றார் திரு டியோ.

“முன்பெல்லாம் அங்குப் பொருளியல் விவாதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்புப் பிரச்சினைகளே முதன்மையாகப் பேசப்பட்டன,” என்றார் அவர்.

மத்திய கிழக்கில் பாதிப்புகள் இருந்தாலும் அங்குள்ள வளங்கள் காரணமாகத் தெமாசெக் தொடர்ந்து முதலீடு செய்வதாகவும் விரைவில் மத்திய கிழக்கில் புதிய அலுவலகமொன்றைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திரு டியோ கூறினார்.

இதற்கிடையே, அண்மை ‌ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்ற திரு டியோ, அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் முன்னேற்றம் தெரிகிறது என்றும் இரு நாடுகளும் ஒரு நிலையான உறவை நோக்கி நகர்வது உலகச் சந்தைக்குச் சாதகமானது என்றும் குறிப்பிட்டார்.

ஜூன் 2ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.
ஜூன் 2ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். - படம்: தெமாசெக்

செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றத்தின் எதிர்காலம்

நிதிச் சந்தையின் தற்காலிக மாற்றங்களைத் தாண்டி, நீண்டகால நிலையான லாபத்தையே தெமாசெக் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தத்துவம் செயற்கை நுண்ணறிவுக்கும் பருவநிலை மாற்றத்திற்குமான அணுகுமுறைக்கும் பொருந்தும் என்றார் திரு டியோ.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘புளோக்செயின்’ மின்னிலக்கத்தளத்தின் மீதிருந்த தற்காலிக மோகத்தைப் போலல்லாமல் செயற்கை நுண்ணறிவை உண்மையான மாற்றமாகக் காண்கிறார் அவர்.

வன்பொருள், மின் உள்கட்டமைப்பு, மருந்துக் கண்டுபிடிப்பு நிறுவனங்கள் என ஒட்டுமொத்தச் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பிலும் தெமாசெக் முதலீடு செய்கிறது.

இதற்காக அதன் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதிக்கும் சீனாவிற்கும் அனுப்பி, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைத் தெமாசெக் நேரடியாக ஆராய்ந்துள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்துப் பேசிய திரு டியோ, “நாங்கள் தீவிரப் போக்குக் கொண்டவர்கள் அல்லர், சந்தேகப்படுபவர்களும் அல்லர், நாங்கள் யதார்த்தவாதிகள்,” என்றார்.

சூரிய ஆற்றல் போன்ற பசுமைத் தொழில்நுட்பங்கள் பொருளியல் லாபத்தை ஈட்டுவதால், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியில் தெமாசெக் முதலீடு செய்து வருகிறது.

2025 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, தெமாசெக்கின் நிகர மதிப்பு S$434 பில்லியன்.

அண்மை மறுசீரமைப்பு மூலம் உலகளாவிய சந்தை மாற்றங்களை எதிர்கொண்டு இந்தியாவிலும் உலக அளவிலும் வளர்ச்சியைப் பதிவுசெய்யத் தெமாசெக் தயாராகி வருகிறது என்று திரு டியோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தெமாசெக்பருவநிலைசெயற்கை நுண்ணறிவுமுதலீடு