சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கின் நிகர சொத்து மதிப்பு, 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டுக்கு $389 பில்லியனாகப் பதிவானது.
அது, ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில் $7 பில்லியன் அதிகம்.
அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அதிக வருமானம் கிடைத்ததே அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். இருப்பினும், சீனச் சந்தைகள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குச் செயல்படவில்லை என்று தெமாசெக் கூறியது.
நிகர சொத்து மதிப்பானது, கடன் பொறுப்புகளைத் தவிர்த்து, ஒரு முதலீட்டில் உள்ள அனைத்து சொத்துகளின் ஒட்டுமொத்தச் சந்தை மதிப்பைக் குறிப்பிடுகிறது.
பட்டியலிடப்படாத சொத்துகளையும் கணக்கில் கொண்டால், தெமாசெக்கினுடைய நிகர சொத்து மதிப்பு $420 பில்லியனாக உள்ளது. ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில், இது $9 பில்லியன் அதிகம்.
தெமாசெக் நிறுவனத்தின் ஆகப் பெரிய சந்தையாகத் தொடர்ந்து இருக்கிறது, சிங்கப்பூர்.
தெமாசெக் முதலீடு செய்யும் நிறுவனங்களில் 53 விழுக்காடு, சிங்கப்பூரில் தலைமையகங்களைக் கொண்டுள்ளன.
முன்னோக்கிப் பார்த்தால், உலகப் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மேலும் திடமாக உள்ளதாகவும், அமெரிக்கா போன்ற முக்கிய வளர்ச்சியடைந்த சந்தைகளில் பொருளியல் மந்தநிலை ஆபத்துகள் பெரும்பாலும் குறைந்துவிட்டதாகவும் தெமாசெக் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பல சந்தைகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், அது முந்தைய நிலையிலிருந்து குறைந்துவருவதாக தெமாசெக் நிறுவனத்தின் சொத்துச் சந்தைப் பிரிவின் தலைவர் அல்பின் மேத்தா கூறினார்.
நிதிக் கொள்கையைத் தளர்த்த இது மத்திய வங்கிகளுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுக்கும் என்றார் அவர்.
இருப்பினும், புவிஅரசியல் நெருக்கடிகள் தொடர்ந்து முக்கியக் கவலையாக இருப்பதாக அவர் கூறினார். திரு மெஹ்தா, அமெரிக்க-சீன உறவுகளையும், உக்ரேனிலும் காஸாவிலும் நடக்கும் பூசல்களையும் சுட்டினார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், முதலீடுகளுக்கு அதிகச் சவால்களை விடுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றுக்கு மத்தியில், தெமாசெக் அதன் முதலீட்டு அணுகுமுறையில் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்படும் என்றார் திரு மேத்தா.
குறிப்பாக, தெமாசெக் பசுமை மாற்றத்திலும் செயற்கை நுண்ணறிவிலும் வாய்ப்புகளை அணுக்கமாகக் கண்காணிப்பதாக அவர் கூறினார்.
முதலீடுகளுக்கு, அமெரிக்கா தெமாசெக் நிறுவனத்தின் ஆகப் பெரிய சந்தையாகத் தொடரும் என்று திரு மேத்தா சொன்னார்.
தெமாசெக், ஐரோப்பாவிலும் வாய்ப்புகளை நாடுகிறது.
இந்தியா, தென்கிழக்காசியா, ஜப்பான் போன்றவற்றிலும் தெமாசெக் அதன் கவனத்தை அதிகரிக்கத் திட்டமிடுவதாக திரு மேத்தா கூறினார்.

