தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏஐ போன்ற புதிய துறைகளில் வாய்ப்புகளைத் தேடும் தெமாசெக்

1 mins read
649597b1-0ddc-4f61-9102-0ed49db6360c
நீண்டகாலத்திற்கு நிலையான ஆதாயங்களை வழங்கக்கூடிய மீள்திறன் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான முதலீட்டுத் தொகுப்பை உருவாக்குவதற்கான தெமாசெக்கின் முயற்சிகளின் ஒரு பகுதி இவை. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற வளர்ந்துவரும் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஏஐ மதிப்புத் தொடரில் உள்ள நிறுவனங்களில் முதலீட்டு வாய்ப்புகளை தெமாசெக் நாடுகிறது.

புதன்கிழமை (ஜூலை 9) வெளியிடப்பட்ட ‘தெமாசெக் மறுஆய்வு 2025’ அறிக்கையில், மின்னிலக்க உள்கட்டமைப்பு, எரிசக்தி உருமாற்ற சொத்துகளை உள்ளடக்கிய வளர்ந்துவரும் ஒரு சொத்து வகையான ஏஐ, கோர்-பிளஸ் உள்கட்டமைப்பு போன்ற புதிய அம்சங்களை ஆராய்வதாக தெமாசெக் குறிப்பிட்டது.

நீண்டகாலத்திற்கு நிலையான ஆதாயங்களை வழங்கக்கூடிய மீள்திறன் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான முதலீட்டுத் தொகுப்பை உருவாக்குவதற்கான தெமாசெக்கின் முயற்சிகளின் ஒரு பகுதி இவை.

தெமாசெக்கின் தலைமை முதலீட்டு அதிகாரி ரோகித் சிபகிமலானி, “குறிப்பாக ஏஐ, எரிசக்தி தொடர்பான துறைகளில் மூலதனத்துக்கும் வாய்ப்புகளுக்கும் கணிசமான தேவை உள்ளது. சில அம்சங்களில், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தேவையும் உள்ளது,” என்றார்.

புதிய நிறுவனங்களைப் பொறுத்தவரை, தெமாசெக்கின் முதலீட்டுத் தொகுப்பில் ஏறக்குறைய 5 விழுக்காடு ஆரம்பக்கட்ட முதலீடுகளில் உள்ளது. தெமாசெக்கின் இடர் மேலாண்மைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, இந்தப் பிரிவில் அதன் முதலீட்டை மொத்த முதலீட்டுத் தொகுப்பு மதிப்பில் 6 விழுக்காடு என வரம்பிட்டுள்ளது.

பிளாக்ராக், குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ், மைக்ரோசாஃப்ட், எம்ஜிஎக்ஸ் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஏஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஷிப் போன்ற பங்காளித்துவ முயற்சி மூலமாகவும் தெமாசெக் செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்கிறது. இந்தப் பங்காளித்துவம் புதிய, விரிவாக்கப்பட்ட ஏஐ உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய முற்படுகிறது.

குறிப்புச் சொற்கள்