ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் முதலீட்டிற்குத் தெமாசெக் ஆதரவு

ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் முதலீட்டிற்குத் தெமாசெக் ஆதரவு

2 mins read
2e1ae5b6-c321-4ef8-915f-f6c344f86ebc
நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பங்கு குறித்துக் கேள்விகள் எழுந்தபோதிலும், அந்நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது எனத் தெமாசெக் குறிப்பிட்டுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மேற்கொண்டுள்ள முதலீட்டுக்குத் தெமாசெக் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 29) தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பங்கு குறித்துக் கேள்விகள் எழுந்தபோதிலும், அந்நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், ஆசியாவில் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவையைப் பயன்படுத்திக்கொள்ள இந்த முயற்சி உதவும் எனக் கருதுகிறது.

மேலும், இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் நிலவும் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற இதுவே சரியான வழி என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக ‘த பிசினஸ் டைம்ஸ்’ நாளிதழுக்குத் தெமாசெக் எழுதிய கடிதத்தில், சவாலான காலகட்டங்களிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது கட்டுக்கோப்பையும் மீள்திறனையும் வெளிப்படுத்தியுள்ளதுடன், நீண்டகால வளர்ச்சிக்காகத் தன்னைத் தொடர்ந்து தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது என விவரித்துள்ளது.

மேலும், இந்தியப் பொருளியலின் வேகமான வளர்ச்சியும் அங்கு அதிகரித்து வரும் நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் விமானப் பயணங்களுக்கான தேவையை உயர்த்தியுள்ளதாகவும் அதனால், ஏர் இந்தியாவில் முதலீடு செய்வது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் எனத் தெமாசெக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொண்டுள்ள முதலீட்டின் தாக்கம் குறித்து அந்நாளிதழில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி கட்டுரை ஒன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து தெமாசெக் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அண்மைய காலத்தில், இந்திய விமான நிறுவன முதலீடு தொடர்பில் கடுமையான கேள்விகளும் கண்காணிப்பும் எழுந்தன.

இருப்பினும், தெமாசெக் தமது நீண்டகால இலக்குகளை முன்வைத்து இந்த முடிவை நியாயப்படுத்தியுள்ளது.

உலகளாவிய சந்தையில் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ள இத்தகைய உத்திபூர்வ பங்காளித்துவங்கள் அவசியம் என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் ஏர் இந்தியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரு நிறுவனங்களும் தங்களின் சேவைகளை விரிவுபடுத்த முடியும். தெமாசெக்கின் இந்த ஆதரவு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்துலக வளர்ச்சித் திட்டங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
தெமாசெக்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஏர் இந்தியாநிதிஆதரவு