தெமாசெக் உலகின் முன்னிலை பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது: பிரதமர் வோங்

தெமாசெக் உலகின் முன்னிலை பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது: பிரதமர் வோங்

2 mins read
50 ஆண்டுகளில் நிறுவனத்தின் உருமாற்றத்தைச் சுட்டினார்
ae297043-a765-47c7-8e92-56b34a5f1261
(இடமிருந்து) தெமாசெக் இன்டர்நேஷனலின் தலைவர் லீ தெங் கியாட், தெமாசெக் அறக்கட்டளைத் தலைவர் ஹோ சிங், பிரதமர் லாரன்ஸ் வோங், தெமாசெக் ஹோல்டிங்ஸ் தலைவர் லிம் பூன் ஹெங், தெமாசெக் ஹோல்டிங்ஸ் துணைத் தலைவர் செங் வாய் கியுங், தெமாசெக் ஹோல்டிங்ஸ் மற்றும் தெமாசெக் இன்டர்நேஷனல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தில்ஹன் பிள்ளை சந்திரசேகரா. - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், கடந்த 50 ஆண்டுகளில் ஆசியாவிலும் உலக அளவிலும் முன்னிலை வகிக்கும் பங்கு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

நிச்சயமற்றதன்மை நிலவும் சூழலிலும் அது வலுவான இடத்திலிருந்து மேலும் முன்னேறுவதாக அவர் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 23ஆம் தேதி, ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற தெமாசெக் நிறுவனத்தின் 50ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

அரசாங்கத்திடமிருந்து 35 நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள தெமாசெக் நிறுவனம், அவற்றைப் பராமரித்து, பாதுகாப்பதிலும் நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்துவதைத் திரு வோங் சுட்டினார்.

அவ்வாறு அது பொறுப்பேற்றுக்கொண்ட நிறுவனங்களில் சில, வட்டார, உலகளாவிய நிலைகளில் துறை சார்ந்த வெற்றியாளர்களாகத் திகழ்கின்றன என்று கூறிய அவர், எடுத்துக்காட்டாக டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.

ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் நேரடி முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரித்ததன் மூலம் தெமாசெக் நிறுவனம் தன்னையும் மேம்படுத்திக்கொண்டது.

சிங்கப்பூரில் மட்டுமன்றி ஆசியா முழுவதும், அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகியவற்றிலும் அது முதலீடு செய்துள்ளது.

இருப்பினும், தெமாசெக் அதன் அடுத்த கட்ட உருமாற்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ள வேளையில், மிகச் சிறந்த தரநிலை, விழுமியங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதிலிருந்து தவறக்கூடாது என்றார் பிரதமர்.

நிறுவனத்தின் தொலைநோக்குச் சிந்தனைத் திறன், வர்த்தக, உத்திபூர்வ ஒழுங்குமுறையோடு வளர்ச்சிகாணுதல், சிங்கப்பூருக்கேயான தரநிலை, நம்பகத்தன்மை, நேர்மை ஆகியவற்றுக்குப் பெருமை சேர்த்தல் ஆகியவை எதனாலும் பாதிப்படையக்கூடாது என்றார் அவர்.

“இவை தெமாசெக்கின் புகழுக்குக் காரணமான அம்சங்கள். தெமாசெக் தொடர்ந்து மதிக்கத்தக்க, நம்பகமான நீண்டகாலப் பங்காளியாக விளங்குவதை உறுதிசெய்யும் அம்சங்கள்,” என்றார் திரு வோங்.

சிங்கப்பூரை வழிநடத்திய அதே கொள்கைகள்தாம் தெமாசெக்கையும் வழிநடத்தியதாக அவர் கூறினார். தற்சார்பு, வெளிப்படைத்தன்மை, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்கும் தொலைநோக்கு மனப்பான்மை போன்றவற்றைப் பிரதமர் சுட்டினார்.

நிகழ்ச்சியில் தெமாசெக் நிறுவனப் பங்காளிகள், அது முதலீடு செய்துள்ள உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிங்கப்பூர் அமைச்சர்கள், அரசாங்க, வர்த்தகத் தலைவர்கள் உட்பட 600க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

‘தலைமுறைகளால் தலைமுறைகளுக்காக: வடிவமைத்தவர்களின் வார்த்தைகளில் தெமாசெக்கின் 50 ஆண்டுகாலம்’ எனப் பொருள்படும் தலைப்பில் நினைவு நூல் ஒன்று வெளியிடப்பட்டது. முன்னாள் செய்தியாளர் ஓங் சோ சின் அதை எழுதியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்