பலரின் ‘ஏஐ’ அச்சத்தைப் போக்க முற்பட்ட தெம்பனிஸ் கண்காட்சி

பலரின் ‘ஏஐ’ அச்சத்தைப் போக்க முற்பட்ட தெம்பனிஸ் கண்காட்சி

2 mins read
36ff875e-77ca-49f3-aed4-db945bfbe365
நமது தெம்பனிஸ் நடுவத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற கண்காட்சிக்கு மக்கள் கழகம், அவர் தெம்பனிஸ் ஹப், என்சிஎஸ் குழுமம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தெம்பனிசில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கண்காட்சி, குடியிருப்பாளர்கள் பலரின் அச்சத்தைப் போக்க முற்பட்டுள்ளது.

நமது தெம்பனிஸ் நடுவத்தில் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெற்றது.

மக்கள் கழகம், நமது தெம்பனிஸ் நடுவம், என்சிஎஸ் குழுமம் ஆகியவை அதற்கு ஏற்பாடு செய்திருந்தன.

கைப்பேசிகளில் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துவதற்குப் படிப்படியாக வழிகாட்டும் நெறிமுறைகளைத் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் தயாரித்திருந்தனர்.

அதற்காகக் ‘குரல்வழி ஏஐ உதவியாளரை’ அவர்கள் உருவாக்கினர். ‘லூனா’ என்பது அதன் பெயர். மின்னிலக்க உலகில் முதியோர் பின்தங்கிவிடக்கூடாது என்பது அதன் நோக்கம்.

“முதியவர்களிடம் பேசியபோது, தங்களுக்குத் திறன்பேசிகளையும் கணினிகளையும் பயன்படுத்தத் தெரியவில்லை என்றும் அதற்குள் ‘ஏஐ’ காலம் வந்துவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.

“இது ஏமாற்றத்தையும் கைவிடப்பட்டது போன்ற உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது,” என்று இந்தக் குரல்வழி உதவியாளரை உருவாக்கிய நால்வரில் ஒருவரான பொறியியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் 23 வயது மாணவர் குய் யுவான் கூறினார்.

முதியோர் பலர் கைப்பேசித் திரைகளில் தட்டச்சு செய்யச் சிரமப்படுகின்றனர். அவர்கள் உணவை இருக்கும் இடத்துக்கு வரவழைக்க வேண்டும் என்றாலோ, வாடகை காரை முன்பதிவு செய்ய விரும்பினாலோ, அதனைச் சொன்னால் போதுமானது.

செயலியில் உள்ள ஒவ்வொரு திரையிலும் அவர்களுக்கு ‘லூனா’ வழிகாட்டும்.

கட்டணம் செலுத்தவேண்டிய இடத்தில் மட்டும் அது விலகிக்கொள்ளும்; அங்குப் பயனர்கள் நேரடியாகச் செயல்பட வேண்டும்.

இந்த மாதிரி வடிவம், ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ், சிங்கிலிஷ் ஆகியவற்றுக்கு இடையே எதில் வேண்டுமானாலும் பேசக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.

கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட 10 திட்டங்களில் இந்த ‘ஏஐ’ உதவியாளரும் ஒன்று.

ஹேக்கத்தான் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியிலிருந்து மே 30ஆம் தேதிவரை நீடித்தது.

முதியோர், மாணவர்கள், சமூகத் தலைவர்கள், உடற்குறையுற்றோர் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன; சிலவற்றுக்குத் தீர்வுகளும் காணப்பட்டுள்ளன.

உயர்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலிருந்து 40க்கும் அதிகமான குழுக்கள் கண்காட்சியில் பங்கெடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தெம்பனிஸ் குடியிருப்பாளர்களிடையே ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பற்றிய அச்சத்தைப் போக்கக் கண்காட்சி உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தால் என்னென்ன செய்யமுடியும் என்பதைக் குடியிருப்பாளர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை வட்டாரவாசிகள் சிறிய அளவிலிருந்து தொடங்கலாம் என்றும் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்கண்காட்சிமாணவர்கள்தெமாசெக்பலதுறைத் தொழிற்கல்லூரிஏஐசெயற்கை நுண்ணறிவு