தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோயில் நன்கொடை திருட்டு: குற்றத்தை ஒப்புகொண்ட பணியாளர்

1 mins read
739b81bb-cfc9-4f5d-ac52-b40ff952a588
குற்றத்தை ஒப்புகொண்ட 44 வயது தாம் லாய் யிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோயிலுக்கு நன்கொடையாகவும் உறுப்பினர் கட்டணமாகவும் வசூலிக்கப்பட்ட $38,000த்திற்கும் அதிகமான பணத்தை அதன் நிர்வாக உதவியாளர் ஒருவர் தன் சொந்த செலவுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

தோ பாயோ சியூ டெக் சியன் டோங் கோயிலில் பணிபுரிந்த 44 வயது தாம் லாய் யிங், அந்தக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட பணத்தைத் தினசரி உணவகங்களில் சாப்பிடுவதற்கும் மளிகைப் பொருள்கள் வாங்கவும் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூலை 25) ஒப்புகொண்டார்.

தாம், அக்கோயிலில் 2022ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதத்தில் பணியில் சேர்ந்ததாகவும் அவருக்கு மாதச் சம்பளமாக $1,600 வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

நன்கொடை மற்றும் உறுப்பினர் கட்டணங்களைப் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கிய பிறகு, அதற்கான ரசீது புத்தகத்தையும் பணத்தையும் கோயிலின் நிதி அதிகாரியிடம் அவர் ஒப்படைக்க வேண்டும்.

கோயிலில் பணிக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, பணத்தைக் கையாடல் செய்ய அவர் தொடங்கியதாகச் சொல்லப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

தண்டனை விதிக்கும்போது தாம்மீது சுமத்தப்பட்டிருக்கும் திருட்டு குற்றச்சாட்டும் கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துகொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி செய்ததற்காகத் தாம்மிற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்