பல இனக் கலாசாரத்தைப் பறைசாற்றும் வண்ணம் இந்து அறக்கட்டளை வாரியம், தோ பாயோ வட்டாரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இன நல்லிணக்க மாதம், எஸ்ஜி60 கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு மரபு, சமயக் கண்காட்சிக்கு வாரியம் முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்தது.
இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் வரும் ஆலயங்கள் அனைத்தும் இதில் பங்கேற்கின்றன.
சனிக்கிழமை (ஜூலை 19) தோ பாயோவில் அமைந்திருக்கும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் அந்தக் கண்காட்சி இடம்பெற்றது.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் இத்திட்டம் மூலம், பல்வேறு சமயங்களைச் சார்ந்த சிங்கப்பூரர்கள் இந்துக் கோயில்களின் பாரம்பரியச் சிறப்பு, வரலாறு, வடிவமைப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.
இதில் மற்றோர் அங்கமாக தோ பாயோ சவுத் சமூக மன்றம், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தின் ஆதரவோடு காம்கேர் சமூகநலன் பயனாளர்களுக்குச் சிறப்பு அன்னதான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஆலயத்தின் அன்னதானத் திட்டம் முதல் முறையாக இந்தப் பயனாளர்களைச் சென்றடைந்தது.
ஏறத்தாழ 60 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பல ஆண்டுகளாக ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதன் அன்னதானத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
சமூகத்தில் மேலும் பலர் பயனடையும் வகையில் ஆலயம் தோ பாயோ ஈஸ்ட் அடித்தள அமைப்புகளுடனும், நல்லிணக்க வட்டத்துடனும் (Harmony Circle) இணைந்து இந்த அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தியது.
இதன் மூலம் கண்டறியப்பட்ட பயனாளர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலயம் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது.
மேலும் வழிகாட்டுதலுடன்கூடிய கோயில் சுற்றுலாக்கள், செயல்பாட்டு அரங்குகள், நடனம், இசை, நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கோயில் உணவைச் சுவைப்பதற்கான வாய்ப்பு போன்றவையும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை அன்னதான நிகழ்ச்சிக்கும், ஆலயத்தைச் சுற்றிப் பார்க்கவும் சிறப்பு வருகை புரிந்திருந்தார் பீஷான் - தோ பாயோ அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் திரு சக்தியாண்டி சுப்பாட்.
“சிங்கப்பூரில் ஆலயங்களுக்கு அருகில் சமூக மன்றம் இருப்பது வழக்கமன்று. ஆலயத்துடனான இந்தச் சமூக ஒத்துழைப்பு மிக அவசியம். இதன் மூலம் ஒருவர் மற்ற கலாசாரங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். இனிவரும் இளைய தலைமுறையினரும் இத்தகைய பல சமூக நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டும்,” என்றார் திரு சக்தியாண்டி சுப்பாட்.
“சிங்கப்பூரின் பல இனக் கலாசாரத்தை இந்து அறக்கட்டளை வாரியத்தின் இத்திட்டம் குறிக்கிறது. அதைப் பிரதிபலிக்கும் விதமாக நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த முக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று சொன்னார் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் சந்திரசேகர், 61.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தொண்டூழியர்கள் ஏறத்தாழ 40 பேர் கைகொடுத்தனர்.
“நான்காண்டுகளாக ஆலயத்தில் உறுப்பினராக இருக்கிறேன். ஓர் இளையராக இத்தகைய நடவடிக்கையில் பங்களித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். நிகழ்ச்சியின் ஏற்பாட்டிலிருந்து, வருகையாளர்களுக்கு உணவு பரிமாறும் வரை அனைத்திலும் ஈடுபட்டேன். பல்வேறு இனத்தவர்கள் இந்துக் கோயில்கள் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள உதவும் சிறந்த முயற்சி இது,” என்று சொன்னார் தொண்டூழியர் மீனாட்சி ராமநாதன், 28.