சொங்பாங் சிட்டி கட்டுமானப் பணிகளுக்குத் தற்காலிகத் தடை

சொங்பாங் சிட்டி கட்டுமானப் பணிகளுக்குத் தற்காலிகத் தடை

2 mins read
நான்கு மாடி வீடமைப்புக் கட்டடம் பாதுகாப்பாக உள்ளது
018db168-b206-4b97-a34e-19da5ffbf011
பக்கத்தில் இருந்த நான்கு மாடி வீடமைப்புக் கட்டடத்தின் கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. - படம்: அமைச்சர் க.சண்முகம் ஃபேஸ்புக்
multi-img1 of 3

சொங் பாங் சிட்டியில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுத் திட்ட கட்டுமானத் தளத்தில் பணிகள் தொடர்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலோகக் கம்பி ஒன்று விழுந்து, அருகில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பின் கூரையை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து, அங்கு கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (மே 2) ஒன்பது மாடிகள் கொண்டு அமைக்கப்படும் அக்கட்டுமானத் தளத்தைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் வெளியேற்றப்படும்போது எதிர்பாராமல் ஒரு இரும்புக் கம்பி, அருகில் இருந்த வீடமைப்புக் கட்டடத்தின் கூரைமீது விழுந்தது.

அதன் விவரங்களை சிங்கப்பூர் நில ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) வெளியிட்ட அறிக்கையில் விவரித்தது. புளோக் 103 ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள நான்கு மாடி வீடமைப்புக் கட்டடத்தின் கூரையில் அந்தக் கம்பி விழுந்து சேதப்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. வீடுகளுக்கும் பாதிப்பு இல்லை. கட்டுமான நிபுணர்கள் சேதம் நடந்த இடங்களைப் பார்வையிட்டு, அதன் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடாக பாதிப்படைந்த பகுதியைச் சுற்றி யாரும் நுழைந்துவிடாமல், பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதன் அருகில் உள்ள மற்ற பொது இடங்களை மக்கள் பயன்படுத்தலாம்.

உள்துறை அமைச்சர் க. சண்முகம் இது குறித்து தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சண்முகம், எதிர்பாராத விபத்து என்று சம்பவத்தை வகைப்படுத்தினார். பாதிப்படைந்த வீடமைப்புக் கட்டடத்தின் கூரையில் குறைபாடுகள் இல்லை என்று குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்த அமைச்சர், தற்போது மறுசீரமைப்புப் பணிகள் அங்கு நடப்பதாகத் தெரிவித்தார்.

சொங் பாங் சிட்டி என்பது நீ சூன் வட்டாரத்தின் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும். முன்பு சொங்பாங் சமூக மன்றமாக இருந்த இடம் தற்போது புதிய பெயருடன் மறுநிர்மாணம் செய்யப்பட்டு, 2027ஆம் ஆண்டில் பற்பல நவீன வசதிகளுடன் அதிகாரபூர்வமாக திறக்கப்படவுள்ளது.

ஈசூன் அவென்யு 5, ஈசூன் ரிங் ரோடு சந்திக்கும் இடத்தில் அது அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்