குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இல்லப் பணிப்பெண்கள் விசாரணைக்கு உதவி வரும் வேளையில், அவர்களைத் தற்காலிகமாக வேலை செய்ய அண்மைய ஆண்டுகளாக அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
இதற்கு முன்னர், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே, மனிதவள அமைச்சின் தற்காலிக வேலைத் திட்டத்தின்கீழ் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்ததை வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிவரும் அரசாங்க சார்பற்ற அமைப்புகள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் குறிப்பிட்டன.
பணிப்பெண்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள், விசாரணை நடைபெறும் காலத்தில் சிங்கப்பூரில் தொடர்ந்து இருக்க சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியில் இருக்கும்போது பழைய வேலையைச் செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விசாரணை நடைபெறும் காலத்தில், தாயகத்தில் தங்கள் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப சிறப்பு அனுமதி வைத்திருப்போர் தற்காலிக வேலை செய்ய தற்காலிக வேலைத் திட்டம் வகைசெய்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வேலை செய்ய அனுமதிப்பது வரவேற்கத்தக்கது என மனித உரிமைக் குழுக்கள் கூறின.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அல்லது விசாரணைக்கு இடையூறு இருப்பதாக கவலை இருந்தாலொழிய, தற்காலிக வேலைத் திட்டத்தின்கீழ் ஊழியர்கள் வேலை செய்ய பொதுவாக அனுமதிக்கப்படுவதாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
“வேலை பெற உதவி தேவைப்படுவோரை, வேலை தேடுவதற்கு வசதியாக வேலை வழங்கும் முகவைகளுக்கு மனிதவள அமைச்சு பரிந்துரைக்கும்,” என்றார் அவர்.
இந்த ஊழியர்கள் பெரும்பாலும் ஹோட்டல் பராமரிப்பாளர்களாக, உணவகங்களில் பாத்திரம் கழுவுபவர்களாக அல்லது இல்லப் பணிப்பெண்களாக ஆறு மாத ஒப்பந்த வேலைகளைப் பெறுகிறார்கள் என்று வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து முதலாளிகளும் இத்தகைய ஊழியர்களை வேலைக்கு எடுக்க தயாராக இல்லை என்றாலும், அவ்வாறு செய்பவர்களில் சிலர் இந்தப் பெண்களைப் பற்றி நேர்மறையான கருத்துகளை அளித்துள்ளதாக கூறுகின்றன. தாங்கள் நேர்மையான, திறமையான ஊழியர்கள் என்பதை நிரூபிக்க அத்தகையோர் உறுதியாக உள்ளனர்.

